சீக்கியர்களுக்கு எதிராக கலவரம்: 40 ஆண்டுகளுக்கு பின் டைட்லருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு பதிவு
சீக்கியர்களுக்கு எதிராக கலவரம்: 40 ஆண்டுகளுக்கு பின் டைட்லருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு பதிவு
ADDED : செப் 14, 2024 04:04 AM

புதுடில்லி: சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் நடந்து, 40 ஆண்டுகளுக்கு பின் காங்., மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லருக்கு எதிராக, கொலை மற்றும் பிற குற்றங்களுக்கான குற்றச்சாட்டுகளை டில்லி நீதிமன்றம் பதிவு செய்தது.
கடந்த 1984 அக்., 31ல், காங்கிரசைச் சேர்ந்த அப்போதைய பிரதமர் இந்திரா, தன் சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, நாடு முழுதும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. 1984 நவ., 1ல், டில்லியின் புல் பங்காஷ் குருத்வாரா ஆசாத் மார்க்கெட்டில் நடந்த கலவரத்தில் மூன்று சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த வன்முறையை, காங்., மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் துாண்டி விட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், 2023 மே 20ல், சி.பி.ஐ., குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கை ஆக., 30ல் விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஜெகதீஷ் டைட்லருக்கு எதிராக வழக்கு தொடர போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தது.
இந்நிலையில், சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் நடந்து, 40 ஆண்டுகளுக்கு பின், காங்., மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லருக்கு எதிராக, கொலை மற்றும் பிற குற்றங்களுக்கான குற்றச்சாட்டுகளை டில்லி நீதிமன்றம் நேற்று பதிவு செய்தது.
மேலும், கலவரம், வெவ்வேறு குழுக்களிடையே பகையை ஊக்குவித்தல், வீட்டில் அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் ஜெகதீஷ் டைட்லர் மீது பதிவு செய்யப்பட்டன. இந்த குற்றங்களில் தனக்கு தொடர்பில்லை என டைட்லர் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

