ஒடிசாவில் திடீரென வெடித்த கலவரம்; இணையசேவைக்கு தடை விதிப்பு
ஒடிசாவில் திடீரென வெடித்த கலவரம்; இணையசேவைக்கு தடை விதிப்பு
ADDED : அக் 05, 2025 10:34 PM

கட்டாக்: ஒடிசாவில் இருதரப்பினரிடையே வெடித்த மோதல் காரணமாக அங்கு கலவரம் வெடித்துள்ளது. இதன் காரணமாக, கட்டாக்கில் 24 மணிநேரத்திற்கு இணைசேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கட்டாக்கில் நேற்றிரவு துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் கற்களை வீசி சரமாரியாக தாக்கிக் கொண்டனர். சாலைகளில் இருந்த தள்ளுவண்டி உள்ளிட்ட பொருட்கள் அடித்து உடைக்கப்பட்டன. மேலும், தீவைக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதையடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று (அக்.,05) மாலை 7 மணி முதல் நாளை (அக்.,06) மாலை 7 மணி வரை 24 மணிநேரத்திற்கு இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கட்டாக் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், பொய்யான தகவல்களை பரப்புவதை தடுக்க சமூக வலைதளங்களான பேஸ்புக், எக்ஸ் மற்றும் வாட்ஸப் சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உதவி ஆணையர் சஞ்சீப் குமார் கூறுகையில், 'கவுரி ஷங்கர் பூங்காவுக்கு அருகில்,வன்முறையாளர்கள் 8 முதல் 10 இடங்களில் தீ வைத்துள்ளனர். நாங்கள் தீயை அணைத்துள்ளோம். வன்முறையாளர்கள் எங்கள் மீது கற்களை வீசி தாக்கினர். இந்த பதற்றமான சூழலைக் கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்,' என்றார்.