UPDATED : நவ 14, 2025 10:51 PM
ADDED : நவ 14, 2025 07:44 PM

புதுடில்லி: '' சாதிவாரி, பிரிவினைவாத கொள்கைகளை காங்கிரஸ் பின்பற்றுகிறது. இதுபோன்ற காங்கிரஸ் மீண்டும் பிளவுபட வாய்ப்பு உள்ளது,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பீஹார் சட்டசபை தேர்தலில் பாஜ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதனையடுத்து அக்கட்சியின் வெற்றியை நாடு முழுவதும் உள்ள பாஜ தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். டில்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்திலும் ஏராளமான தொண்டர்கள் ஒன்று கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி, நட்டா, அமித்ஷா உள்ளிட்டோரின் புகைப்படங்களை ஏந்தியும், இனிப்புகளை கொடுத்தும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பாஜ தலைமை அலுவலகத்துக்கு மத்திய அமைச்சசர்கள் அமித்ஷா, நட்டா வந்தனர். பிறகு பிரதமர் மோடி வந்தார். அவரை பாஜ தொண்டர்கள் வரவேற்றனர். தொண்டர்களை நோக்கி கையில் இருந்த துண்டை காண்பித்து பிரதமர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அமித்ஷா, நட்டா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பிரதமர் மோடிக்கு மலர் மாலை அணிவித்து கவுரவித்தனர்.
வளர்ச்சி
இதன் பிறகு நட்டா பேசியதாவது: பீஹாரில் கிடைத்த வெற்றிக்காக கோடிக்கணக்கான தொண்டர்கள் சார்பில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமக்கு மக்கள் பெரிய ஆதரவை அளித்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி மீது மக்கள் வைத்த நம்பிக்கையை இது காட்டுகிறது. காட்டாட்சியை காட்டிலும் வளர்ச்சியை மக்கள் தேர்வு செய்துள்ளனர். கடந்த காலங்களில் செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்பதற்காக தொடர்ந்து பாஜவுக்கு ஓட்டுப் போட்டு வருகின்றனர். இவ்வாறு நட்டா பேசினார்.
வாழ்த்துகள்
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது: மாபெரும் வரலாற்று தீர்ப்பை கொடுத்து, பீஹார் மக்கள் அனைத்து தேர்தல் சாதனைகளையும் முறியடித்துவிட்டனர் பழைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளனர். மறைந்த ஜெய்பிரகாஷ் நாராயணன், கர்பூர் தாகூரை வணங்குகிறேன். இனி ஒரு போதும் ஆர்ஜேடி அரசு மீண்டும் வரப்போவது கிடையாது.
அவர்கள் முஸ்லிம் யாதவர்கள் கூட்டணியால் வெல்ல முயன்றனர். நாம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஓட்டுகளால் அவர்களை வீழ்த்தியுள்ளோம். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை வணங்குகிறேன்.தேஜ கூட்டணி கட்சிகளுக்கு வாழ்த்துகள்.
இந்த மாபெரும் வெற்றி மற்றும் மக்களின் ஆதரவு, மாநிலத்தில் பெரிய புயலை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் மக்களின் சேவகர்கள். எங்களின் கடின உழைப்பு மூலம் மக்களை மகிழ்ச்சி அடைய வைத்தோம். மக்களின் மனங்களை திருடியுள்ளோம். இதனால் தான் மீண்டும் ஒரு முறை தேஜ கூட்டணி அரசை மக்கள் கொண்டு வந்துள்ளனர்.மாபெரும் வரலாற்று வெற்றியை அளித்துள்ள பீஹார் மக்களின் நலனுக்காக தேஜ கூட்டணி அரசு பாடுபடும்.
சாதனை
இந்தத் தேர்தல், தேர்தல் ஆணையத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய சாதனையாகும். இந்த வெற்றி வளர்ச்சி அரசியலுக்கும், உறவினர்களுக்கு சலுகை காட்டும் அரசியலை நிராகரிப்பதற்கும் கிடைத்த தீர்ப்பு.ஆர்ஜேடியின் காட்டாட்சியை எதிர்கொண்ட பெண்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
திருப்திபடுத்தும் அரசியலை பீஹார் தேர்தல் முடிவுகள் நிராகரித்துள்ளன.பீஹார் மக்கள் பொய்களை தோற்கடித்ததுடன், ஜாமினில் வெளியே வந்தவர்களை ஆதரிப்பது இல்லை என்பதை நிரூபித்துள்ளனர்.
அதிக ஓட்டு
பீஹாரில் தொழிற்சாலைகள், ரயில் மற்றும் விமானங்கள் தேவையில்லை என்றனர். இந்த வெற்றியானது வாரிசு ஆட்சிக்கு எதிரான வளர்ச்சிக்கான ஒரு உத்தரவு. மாநிலம் வளர்ச்சி பெற செய்வதற்கு மக்கள் முக்கிய பங்காற்றினர்.காட்டாட்சி நடந்த போது, பீஹாரில் நடக்கும் தேர்தலின் போது ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுவதும், வன்முறைகள் நடப்பதும் , ஓட்டுப்பெட்டிகளை கைப்பற்றுவதும், வழக்கமாக இருந்தது. இனிமேல் அதுபோன்ற நிகழ்வுகளுக்கு இடமில்லை. தற்போது அதிகளவு ஓட்டு சதவீதம் பதிவாகியுள்ளது.
வலுவான ஆதரவு
நக்சல் பாதித்த பகுதிகளில் 3 மணி வரை மட்டுமே ஓட்டுப்பதிவு நடந்த காலம் உண்டு. தற்போது மக்கள் பயமின்றி ஓட்டுப்போடுகின்றனர். அதிக எண்ணிக்கையில் ஓட்டு செலுத்தி ஜனநாயகம் மற்றும் தேர்தல் கமிஷன் மீதான நம்பிக்கையை வெளிப்டுத்திய மக்களை நான் பாராட்டுகிறேன். பீஹார் தேர்தல் நமது வாக்காளர்கள், குறிப்பாக இளைஞர்கள், வாக்காளர் பட்டியலின் துல்லியத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலுக்கு பீஹார் மக்கள் வலுவான ஆதரவைக் காட்டியுள்ளனர்.
சாத் பண்டிகையை நாடகம் என்றவர்கள் எப்படி பீஹாரின் பாரம்பரியத்தை மதிப்பார்கள். மாநிலத்தின் பாரம்பரியத்தை அவமதித்ததுடன், பீஹார் குறித்து அவதூறுகளை உருவாக்கினர்.
ஒட்டுண்ணி
கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி என்றும், அவர்களுக்கு அக்கட்சி பெரிய சுமை என்றும் நான் விமர்சித்து இருந்தேன். பொய் குற்றச்சாட்டு, சாதிவாரி, பிரிவினைவாத கொள்கைகளை காங்கிரஸ் பின்பற்றுகிறது. இதுபோன்ற காங்கிரஸ் மீண்டும் பிளவுபட வாய்ப்பு உள்ளது. குளத்தில் குதித்த காங்கிரஸ் கட்சி தலைவர், கூட்டணி கட்சிகளையும் மூழ்கடிக்க பயிற்சி எடுத்தார். காங்கிரஸிடம் நாட்டுக்கான நேர்மறையான பார்வை இல்லை. அது முஸ்லிம் லீக் மாவோடி காங்கிரஸ் ஆகிவிட்டது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

