புல்லட் ரயில் பாதை அமைக்கும் பணி: வீடியோ வெளியிட்டார் ரயில்வே அமைச்சர்
புல்லட் ரயில் பாதை அமைக்கும் பணி: வீடியோ வெளியிட்டார் ரயில்வே அமைச்சர்
ADDED : மார் 29, 2024 02:58 PM

புதுடில்லி: புல்லட் ரயிலுக்கான இந்தியாவின் முதல் ‛ பேலஸ்ட்லெஸ் டிராக்' என்ற புது வகையான ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருவது குறித்த வீடியோவை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டு உள்ளார்.
இந்தியாவில் 2026 முதல் புல்லட் ரயில் இயக்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை முதல் குஜராத்தின் ஆமதாபாத் வரையிலான வழித்தடத்தில், 508 கி.மீ., தூரத்திற்கு முதல் புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனை பொது மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த புல்லட் ரயிலுக்காக ‛ பேலஸ்ட்லெஸ் டிராக் சிஸ்டம்' என்ற புது வகையான ரயில்ப் பாதை முதல்முறையாக உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், புல்லட் ரயிலுக்கான இந்தியாவின் முதல் ‛பேலஸ்ட்லெஸ் டிராக்' குறித்த வீடியோவை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ‛எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். அத்துடன் ரயில் மணிக்கு 350 கி.மீ., வேகத்தில் பயணிக்கும், 153 கி.மீ., தூரம் பாதை அமைக்கும் பணிகளும்,295.5 கி.மீ., தூரத்திற்கு பாலம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துவிட்டன. பிரதமர் மோடியின் 3வது ஆட்சி காலத்தில் இன்னும் நிறைய வர உள்ளன எனக்கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

