கர்நாடக மேல்சபை தலைவர் வீட்டருகே கொள்ளையர்கள் சுட்டுப்பிடிப்பு!: கொள்ளை நடந்த பகுதியிலேயே போலீசார் சுற்றி வளைத்தனர்
கர்நாடக மேல்சபை தலைவர் வீட்டருகே கொள்ளையர்கள் சுட்டுப்பிடிப்பு!: கொள்ளை நடந்த பகுதியிலேயே போலீசார் சுற்றி வளைத்தனர்
ADDED : மார் 15, 2025 11:37 PM

ஹூப்பள்ளி: கர்நாடக மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி வீட்டு அருகே, ஒரு வீட்டில் கைவரிசை காட்டிய இரண்டு கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டு போலீசார் நேற்று பிடித்தனர். கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில், சில போலீசாரும் காயம் அடைந்தனர்.
ஹூப்பள்ளி புறநகர் பகுதியில், தன் குடும்பத்தினருடன் கர்நாடக மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி வசிக்கிறார். இவரது வீட்டு அருகில், அடுக்குமாடி குடியிருப்பில் வெளியூர் சென்றிருந்த ஒருவரின் வீட்டுக்குள் கடந்த 1ம் தேதி மர்ம கும்பல் புகுந்தது. 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிச் சென்றது.
மேல்சபை தலைவரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு இருக்கும். இத்தகைய பகுதியில் திருட்டு நடந்தது, பரபரப்பை ஏற்படுத்தியது. திருட்டு நடந்த வீட்டின் உரிமையாளர், இது தொடர்பாக, ஹூப்பள்ளி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணை
போலீசாரும் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். சம்பவம் நடந்த இடத்தின் சுற்றுப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். பல கோணங்களில் விசாரணை நடத்தினர்.
ஹூப்பள்ளியில் நடந்த கொள்ளையை போன்றே, தார்வாடின் வித்யாகிரி, சஹரா, ஹூப்பள்ளியின் கேஸ்வாபுரா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் கொள்ளை நடந்திருப்பது, போலீசாருக்கு தெரிந்தது.
இவற்றின் அடிப்படையில் விசாரித்தபோது, உத்தரபிரதேசம் மற்றும் டில்லியில் உள்ள கொள்ளை கும்பல், ஹூப்பள்ளியில் கைவரிசை காட்டியிருப்பதை கண்டுபிடித்தனர்.
'சோட்டா மும்பை' என, அழைக்கப்படும் இந்த கும்பலை சேர்ந்தவர்கள், ஹூப்பள்ளியில் கைவரிசை காட்டியதை ஹூப்பள்ளி போலீசார் கண்டுபிடித்தனர். அதன்பின் அவர்களை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.
அவர்கள் ஷிவமொக்காவில் இருப்பது தெரிந்தது. அங்கிருந்து அவர்கள் மீண்டும் ஹூப்பள்ளிக்கு வரும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அவர்களை வளைத்து பிடிக்க, போலீசார் திட்டமிட்டு, நேற்று அதிகாலை 3:30 மணியளவில் ஹூப்பள்ளிக்கு புறப்பட்டனர்.
ஹூப்பள்ளி புறநகரின், தேவர குடிஹாளா சாலையில் கொள்ளையர்களை மடக்கினர். போலீசாரை கண்ட கொள்ளையர்கள், மிளகாய் பொடி வீசி, உருட்டுக் கட்டையால் தாக்கினார்.
எஸ்.ஐ., தேவேந்திர மாவினன்டி, துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு, சரண் அடையும்படி எச்சரித்தார். ஆனால் கொள்ளையர்கள் மீண்டும் போலீசாரை தாக்க முற்பட்டதால், எஸ்.ஐ., சுட்டதில், இருவரின் கால்களில் குண்டு பாய்ந்து கீழே விழுந்தனர்.
அவர்களை கைது செய்த போலீசார், மருத்துவமனையில் சேர்த்தனர். மற்றொரு கொள்ளையன் ஷம்ஷாத் குரேஷி, 35, என்பவரை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.
கைதானவர்கள் உத்தரபிரதேசத்தின் அக்பர், 35, இர்ஷாத், 35, என்பது விசாரணையில் தெரிந்தது. இவர்கள் மீது, பல்வேறு மாநிலங்களில் 20க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் பதிவாகியுள்ளன. கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில், மூன்று ஏட்டுகள் காயமடைந்து, சிகிச்சை பெறுகின்றனர்.
நட்சத்திர ஹோட்டல்
ஹூப்பள்ளி - தார்வாட் நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் அளித்த பேட்டி:
மார்ச் 1ம் தேதி நடந்த கொள்ளையில் தொடர்பு கொண்ட இருவர், நேற்று போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்டனர்.
தற்போது கைதான இவர்கள், கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநில போலீசாரால் தேடப்படும் குற்றவாளிகள்.
இந்த கும்பலை சேர்ந்தவர்கள், முக்கிய நகரங்களுக்கு வந்து, நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவர். முக்கிய புள்ளிகள், செல்வந்தர்கள் வசிக்கும் பகுதிகளில் காரில் சுற்றி வந்து நோட்டம் விடுவர். திருடுவதற்கு தோதான வீடுகளை அடையாளம் காண்பர். அதன்பின் திட்டம் தீட்டி வீட்டுக்குள் புகுந்து, பணம், தங்க நகைகள், விலை உயர்ந்த பொருட்களை திருடிக் கொண்டு தப்பிவிடுவர்.
தங்களை பற்றிய சாட்சியங்கள் கிடைக்க கூடாது என்பதால், சம்பவத்துக்கு பயன்படுத்திய சொகுசு காரை, தீ வைத்து எரிப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.