காசாளர் கழுத்தில் கத்தி வைத்து வங்கியில் ரூ.9 லட்சம் கொள்ளை
காசாளர் கழுத்தில் கத்தி வைத்து வங்கியில் ரூ.9 லட்சம் கொள்ளை
ADDED : பிப் 02, 2024 11:54 PM
லக்னோ: உத்தர பிரதேசத்தில் வங்கிக்குள் ஹெல்மெட்டுடன் சென்ற மர்ம நபர், காசாளர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி, 9 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றார்.
உத்தர பிரதேசத்தில் கோண்டா நகரில் இயங்கும் தனியார் வங்கிக்குள், மக்கள் நடமாட்டம் யாரும் இல்லாததை அறிந்து, நேற்று மர்ம நபர் ஒருவர், ஹெல்மெட் அணிந்தபடி உள்ளே சென்றார்.
நேராக காசாளர் இருக்கும் அறைக்குள் சென்ற அவர், பின்புறத்தில் நின்றபடி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை அவரது கழுத்தில் வைத்து மிரட்டினார்.
இதனால் அச்சமடைந்த பெண் காசாளர், அங்கு அறையில் வைத்திருந்த 9 லட்சம் ரூபாயை, மர்ம நபரின் பைகளில் நிரப்பினார்.
பணத்தை கொள்ளையடித்த பின் அந்த மர்ம நபர், கண்ணிமைக்கும் நேரத்தில் தலைமறைவானார். இச்சம்பவம் குறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
தப்பியோடிய மர்ம நபரை பிடிக்க, தனிப்படை அமைத்துள்ள போலீசார், வங்கி ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கி வளாகத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, கொள்ளையடித்த நபர், 20 நிமிடங்களாக வங்கியில் ஹெல்மெட் அணிந்தபடி அமர்ந்திருந்தது தெரிய வந்தது.
மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், காசாளர் இருந்த அறைக்குள் சென்ற அவர், பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

