ADDED : அக் 16, 2024 08:52 PM
சராய் ரோஹில்லா: வடக்கு டில்லியில் இருவரை கட்டிப்போட்டு கத்திமுனையில் 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள பணம், நகைகளை கொள்ளையடித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
வடக்கு டில்லியின் சராய் ரோஹில்லா பகுதியில் ஒரு வீட்டுக்குள் கடந்த 8ம் தேதி மதியம் இருவர் கத்திமுனையில் உள்ளே புகுந்தனர்.
வீட்டில் இருந்த ஒரு நோயாளி மற்றும் வீட்டுப்பணிப் பெண் ஆகிய இருவரையும் கட்டிப்போட்டனர். பின் 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள பணம், நகைகளை கொள்ளையடித்துத் தப்பிச்சென்றனர்.
அக்கம் பக்கத்தினர் வந்தபோது, கொள்ளைச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. தகவலறிந்து வந்த போலீசார், சுற்றுப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அதே பகுதியைச் சேர்ந்த முகுல், 22, உட்பட இருவரை போலீசார் அடையாளம் கண்டனர். 10ம் தேதி முகுல் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்துக்கு ஜஸ்கிரத் என்ற அமன், 25, மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, ஜஸ்கிரத் என்ற அமன், அர்ஜுன் என்கிற நோன்னு, 22, மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆறு லட்ச ரூபாய் மீட்கப்பட்டது.
கொள்ளையடித்த பணம், நகைகளை தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர். இதற்கு முன்பு கொள்ளை உள்ளிட்ட குற்றங்களில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.