ADDED : மார் 18, 2026 01:36 AM

புதுடில்லி அரசு அதிகாரிகள் போல நடித்து, பயணியரிடம் பணம், நகை, பொருட்களை கொள்ளையடித்த, மூன்று பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
டில்லியில் உள்ள புதுடில்லி ரயில்வே ஸ்டேஷன் அருகே நின்று கொண்டு, அரசு அதிகாரிகள் போல வேஷமிட்டு, அப்பாவி பயணியரை மிரட்டி, ஒரு கும்பல் பணம், நகைகளை கொள்ளையடிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், டில்லி அருகே உள்ள பதேபூர் பெரி என்ற பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கிருஷ்ணன் குமார், 50, ஆக்ராவை சேர்ந்த ரவிகுமார், 50, பதேபூர் பெரியை சேர்ந்த ராகுல் குப்தா, 32, ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அரசு அதிகாரிகள் போல செயல்பட்டு, அப்பாவி, ஏமாறும் பயணியரிடம் பணம், பொருட்களை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர்.
இந்த கும்பலில் ஒருவரான ராகுல் குப்தா, சக பயணி போல நடித்து, பிற பயணியரை ஏமாற்றி வந்ததை போலீஸ் விசாரணையில் ஒப்புக் கொண்டார். அவர் அளித்த தகவலின்படி, பதேபூர் பெரியில் மறைந்திருந்த மூன்று பேரும், கைது செய்யப்பட்டனர்.
அந்த கும்பலிடம் இருந்து, பொதுமக்களை ஏமாற்றி பறித்த, லட்சம் ரூபாய், ஏ.டி.எம்., கடன் அட்டைகள், தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்து, அந்த பொருட்களை யாரிடம் இருந்து முறைகேடாக அபகரித்தனர் என விசாரிக்கின்றனர்.

