'ரோபோ' அறுவை சிகிச்சை தொழில்நுட்பம் அசாமில் முதன்முறையாக அறிமுகம்
'ரோபோ' அறுவை சிகிச்சை தொழில்நுட்பம் அசாமில் முதன்முறையாக அறிமுகம்
ADDED : ஏப் 14, 2025 03:01 AM

குவஹாத்தி:உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ரோபோ' அறுவை சிகிச்சை வசதி, வடகிழக்கு மாநிலங்களில் முதன்முறையாக, அசாமின் குவஹாத்தி மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் புற்றுநோய் மையத்தில் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.
அறுவை சிகிச்சைகள் மிக தெளிவாகவும், துல்லியமாகவும் செய்யப்படும் போது மட்டுமே அது வெற்றி பெற்று, நோயாளி கள் ஆபத்தின்றி உயிர் பிழைக்கின்றனர்.
பெரும் வரவேற்பு
மனித கரங்களை விட, ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள் மிக நுணுக்கமாகவும், துல்லியமாகவும் செய்யப்படுவதால், இதற்கு பெரும் வரவேற்பு உள்ளது.
அந்த வகையில், 'மெடி ஜார்விஸ்' என்ற ரோபோ அறுவை சிகிச்சை தொழில்நுட்பம் நம் நாட்டில் உருவாக்கப்பட்டது.
நோயாளியின் உடலில் மிக குறைவான அளவு கத்தியை பயன்படுத்தி, குறைவான ரத்த போக்குடன் செய்யப்படும் இந்த வகை அறுவை சிகிச்சைகள், மருத்துவ உலகிற்கு கிடைத்த மிகப்பெரிய வரமாக பார்க்கப்படுகின்றன.
இந்த ரோபோ அறுவை சிகிச்சை தொழில்நுட்ப வசதி, வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தி மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் மாநில புற்றுநோய் மையத்தில் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.
மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ.,வைச் சேர்ந்த மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, இதை மக்களுக்கு அர்ப்பணித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
வடகிழக்கின் முதல் ரோபோ அறுவை சிகிச்சை தொழில்நுட்பத்தை குவஹாத்தி அரசு மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவில் துவங்குவதன் வாயிலாக, அசாமிய புத்தாண்டு கொண்டாட்டங்களை துவங்கியுள்ளோம். இது, மிகவும் பெருமைமிக்க தருணம்.
கூடுதல் சிகிச்சைகள்
புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைகள் இனி குறைந்த கட்டணத்தில், அதிக துல்லியத்துடன் மக்களுக்கு கிடைக்கும். இதேபோன்ற வசதிகள் சில்சார் மற்றும் திப்ருகர் மாவட்டங்களிலும் விரைவில் கிடைக்க உள்ளன.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ரோபோ அறுவை சிகிச்சை தொழில்நுட்பத்தை, மத்திய அரசிடம் இருந்து, 14.99 கோடி ரூபாய்க்கு அசாம் அரசு வாங்கியுள்ளது. புற்றுநோய்க்கு மட்டுமின்றி சிறுநீரகவியல், மகப்பேறு, இதய அறுவை சிகிச்சைகளுக்கும் இந்த ரோபோ பயன்படுத்தப்பட உள்ளது.