ரோகினி - -ரூபாவுக்கு சுப்ரீம் கோர்ட் இறுதிவாய்ப்பு?
ரோகினி - -ரூபாவுக்கு சுப்ரீம் கோர்ட் இறுதிவாய்ப்பு?
ADDED : ஜன 18, 2024 05:02 AM

தங்கள் இடையேயான பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள ஐ.ஏ.எஸ்., ரோகினி சிந்துாரி மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா ஆகிய இருவருக்கும் உச்ச நீதிமன்றம் இறுதிவாய்ப்பை வழங்கியுள்ளது.
கர்நாடகா அரசிதழில் துறை முதன்மை ஆசிரியராக இருப்பவர் ஐ.ஏ.எஸ்., ரோகினி சிந்துாரி. உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு ஐ.ஜி.,யாக இருப்பவர் ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா. இவர்கள் இருவருமே கர்நாடகாவில் தங்களின் அதிரடி நடவடிக்கைகளால் பிரபலமாகி இருப்பவர்கள்.
ரோகினி சிந்துாரியின் தனிப்பட்ட புகைப்படங்களை, தனது சமூகவலைதளப் பக்கத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பதிவிட்டார்.
அத்துடன் சிந்துாரியிடம் சில கேள்விகளை எழுப்பி, அவரது அந்தரங்க புகைப்படங்களையும் ரோகினி பதிவேற்றியிருந்தார்.
இதையடுத்து இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. தலைமை செயலர் உத்தரவையும் மீறி, இரு பெண் அதிகாரிகளும், ஊடகங்களில் சண்டை போட்டுக் கொண்டனர். இதனால் அரசுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது.
வேறுவழியின்றி இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு அரசு மாற்றியது. ஏழு மாதங்களுக்கு பின்பு தான், அவர்களுக்கு மீண்டும் பணி ஒதுக்கப்பட்டது.
இதற்கிடையில் ரூபாவுக்கு எதிராக ரோகினி சிந்துாரி சட்டப்போராட்டத்தைத் துவக்கினார். பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 500 (அவதுாறு)ன்படி, 1 கோடி ரூபாய் மானநஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
இதை எதிர்த்து அங்கும், உயர் நீதிமன்றத்திலும் ரூபா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
தற்போது டில்லி உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுவிப்பு மனுவை ரூபா தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி ஏ.எஸ்.ஒகா விசாரிக்கிறார்.
உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை ஏற்று, தன் சமூக வலைதளப்பக்கங்களில் இருந்த ரோகினி குறித்த அனைத்துப் பதிவுகள் அனைத்தையும் நீக்கிவிட்டதாக ரூபா சார்பில் கடந்த 12ம் தேதி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இருவரும் பொறுப்புள்ள அதிகாரிகள் என்பதாலும், அவர்கள் மீதான அக்கறை காரணமாக தங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள இருவருக்கும் மற்றொரு அவகாசம் அளிக்கப்படுகிறது. வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களிலோ பிற ஊடகங்களிலோ பகிரங்கமாக கருத்து தெரிவிக்க தடை விதிக்கப்படுகிறது.
ரூபாவுக்கு எதிராக சிந்துாரி தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைக்கு டிசம்பர் 15 விதிக்கப்பட்ட தடை தொடரும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து, தங்கள் பிரச்னையை தீர்த்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளதாக கருதப்படுகிறது- நமது நிருபர் -.