ஐ.பி.எஸ்., ரூபா மன்னிப்பு கேட்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் ரோகிணி தரப்பு கோரிக்கை
ஐ.பி.எஸ்., ரூபா மன்னிப்பு கேட்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் ரோகிணி தரப்பு கோரிக்கை
ADDED : ஜன 12, 2024 11:30 PM

ஐ.பி.எஸ்., ரூபா நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க, உச்ச நீதிமன்றத்தில் ஐ.ஏ.எஸ்., ரோகிணி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
கர்நாடகா அரசிதழில் துறை முதன்மை ஆசிரியராக இருப்பவர் ஐ.ஏ.எஸ்., ரோகிணி சிந்துாரி. உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு ஐ.ஜி.,யாக இருப்பவர் ஐ.பி.எஸ்., ரூபா. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரோகிணி சிந்துாரியின் தனிப்பட்ட புகைப்படங்களை, ரூபா தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
மேலும், ரோகிணி சிந்துாரியிடம் சமூக வலைத்தளம் வாயிலாக 19 கேள்விகளை எழுப்பினார். இதற்கு ரோகிணி சிந்துாரியும் பதிலடி கொடுத்தார். தலைமை செயலர் உத்தரவையும் மீறி, இரு பெண் அதிகாரிகளும், ஊடகங்கள் முன் பகிரங்கமாக பேசினர்.
புகைப்படங்கள் நீக்கம்
இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு அரசு மாற்றியது. ஏழு மாதங்களுக்கு பின்பு தான், மீண்டும் பணி ஒதுக்கப்பட்டது.
மானநஷ்ட வழக்கு
இதற்கிடையில் ரூபா மீது ரோகிணி சிந்துாரி, பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில், மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து ரூபா தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆனது.
கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் ரூபா மனு தள்ளுபடி ஆனதால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை நீதிபதி ஏ.எஸ்.ஒகா விசாரிக்கிறார். அதிகாரிகள் இருவரும் அமர்ந்து பேசி, சமரசம் செய்து கொள்ளும்படி நீதிபதி கூறினார். ஆனால் அவர்கள் இருவரும் ஏற்கவில்லை.
கடந்த டிசம்பர் 14ம் தேதி நடந்த விசாரணையின்போது, ரோகிணி சிந்துாரியின் புகைப்படங்கள், அவர் குறித்த பதிவுகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கும்படி, ரூபாவுக்கு நீதிபதி ஏ.எஸ்.ஒகா உத்தரவிட்டார்.
அதன்படி ரூபாவும், ரோகிணி சிந்துாரி புகைப்படங்கள், அவருக்கு எதிரான பதிவுகளை நீக்கியிருந்தார். இந்நிலையில் மனு மீது நேற்று விசாரணை நடந்தது.
மனநலம் பாதித்தவர்
ரூபா தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், 'உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ரோகிணி சிந்துாரி தொடர்பான புகைப்படங்கள், பதிவுகளை எனது மனுதாரர் நீக்கிவிட்டார்' என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட ரோகிணி சிந்துாரி தரப்பு வக்கீல், 'புகைப்படங்கள், பதிவுகளை நீக்கினால் மட்டும் போதாது. ஐ.பி.எஸ்., ரூபாவால் எனது மனுதாரருக்கு, சமூகத்தில் இருந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது.
'மக்கள் அவரை வித்தியாசமாக பார்க்கின்றனர். இதனால் எனது மனுதாரரிடம் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றார்.
ரூபா தரப்பு வக்கீல் மீண்டும் வாதாடுகையில், 'ஐ.ஏ.எஸ்., ரோகிணி சிந்துாரி, எனது மனுதாரரை மனநலம் பாதித்தவர் என்று கூறினார். இதற்கு அவரும் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றார்.
விசாரணை ஒத்திவைப்பு
மீண்டும் குறுக்கிட்ட ரோகிணி தரப்பு வக்கீல், 'மனநலம் பாதித்தவர்கள் தான் இதுபோன்று பதிவுகளை வெளியிடுவர் என்று தான், எனது மனுதாரர் கூறினார். ஐ.பி.எஸ்., ரூபா பெயரை குறிப்பிட்டு, அவர் சொல்லவில்லை' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏ.எஸ்.ஒகா கூறுகையில், ''மனுதாரர், எதிர்மனுதாரருக்கு சமூக பொறுப்பு உள்ளது.
''இதை மனதில் வைத்து இருவரும் செயல்பட வேண்டும்,'' என்றார். விசாரணையை மார்ச் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
- நமது நிருபர் -