பொது மக்களுக்கு கடமைப்பட்டவர்கள்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பேச்சு
பொது மக்களுக்கு கடமைப்பட்டவர்கள்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பேச்சு
ADDED : நவ 26, 2024 10:26 PM

புதுடில்லி: '' நாம் பொது மக்களின் நலன், உரிமைகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும். நாம் அவர்களுக்கு கடமைப்பட்டவர்கள்,'' என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறினார்.
அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட்டில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பேசியதாவது: நீதித்துறையின் பங்கு, ஜனநாயகத்துடன் நேரடியாக இணைந்துள்ளது. இதற்கு அரசியலமைப்பு வகுத்துள்ள வழிகாட்டுதல்களால் மட்டுமே அது சாத்தியமானது. நீதிபதியின் பங்கு என்பது கத்தி முனையில் நடப்பது போன்றது. ஒவ்வொரு தீர்ப்பும் வெற்றியாளர் மற்றும் தோல்வியாளர்களை உருவாக்கும். சிலர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை அழைக்கவும், மற்றவர்கள் விமர்சனம் செய்ய தூண்டவும் செய்யும்.
சிலருக்கு இந்திய அரசியலமைப்பு நீதிமன்றங்கள் உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தவை. மற்றவர்களுக்கு நாம், அரசியலமைப்பு கடமைகளில் இருந்து விலகி இருக்கிறோம். அரசியல் சாசனம், தேர்தல் செயல்முறை மாற்றங்களில் இருந்து நீதித்துறையைப் பாதுகாக்கிறது. முடிவுகள் நியாயமானவை என்பதை உறுதி செய்கிறது.
அடிப்படை உரிமைகளின் பாதுகாவலர் என்ற அடிப்படையில் கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை நீதித்துறை செயல்படுகிறது. நாம், அரசியலமைப்பு கடமைக்கு கட்டுப்பட்டு உள்ளோம். அதேநேரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறோம். இதன் மூலம் நமது கவனம் பொது மக்கள் நலனிலும், அவர்களின் உரிமையை பாதுகாப்பதிலும் இருக்கிறது. நாம், பொது மக்களுக்கு கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம். நமது தன்னாட்சி மற்றும் பொறுப்பை உணர்ந்து இருக்கிறோம். இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.

