ADDED : டிச 05, 2024 02:42 AM
சபரிமலை : ஜனவரியில் மகர விளக்கு கால பூஜை முடிந்த பின்னர் சபரிமலை ரோப்பே திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட தேவசம்போர்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சபரிமலைக்கு தேவையான பொருட்களை கொண்டு வருவதற்கு தற்போது டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. அவற்றுக்குப் பதிலாக ரோப்பே திட்டத்திற்கு வடிவம் கொடுக்கப்பட்டது. ஆனால் வனத்துறை, நிலம் சம்பந்தமான பிரச்னை எழுப்பியதால் அது பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது.
கேரள உயர் நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி வருவாய், வனம் மற்றும் தேவசம் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ரோப்வே திட்டத்துக்காக வனத்துறை வழங்கும் நிலத்துக்கு பதிலாக கொல்லம் மாவட்டத்தில் மாற்று நிலம் வழங்கப்பட்டு விட்டது.
இதைத்தொடர்ந்து ரோப்வே பணி துரிதமடைந்துள்ளது.
2.7 கி.மீ. துாரமுள்ள இந்த ரோப்வேக்கு 40 முதல் 60 மீட்டர் வரை உயரத்தில் துாண்கள் அமைக்கப்படுகிறது. பம்பை ஹில்டாப்பில் தொடங்கும் இந்த பாதை சன்னிதானம் போலீஸ் தங்குமிடம் அமைந்துள்ள கட்டடம் அருகே முடிவடைகிறது. இதில் நான்கு கார் ஆம்புலன்ஸ்களும் உண்டு.
தாமோதர் கேபிள் கார் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் பி. ஓ. டி. திட்டத்தில் இதை ஒப்பந்தம் செய்துள்ளது. 250 கோடி ரூபாய் செலவு மதிப்பிடப்பட்டுள்ளது. 18 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மகர விளக்கு கால பூஜை முடிந்த பின்னர் பம்பையில் அடிக்கல் நாட்டப்படும் என்று தேவசம்போர்டு அதிகாரிகள் கூறினர். மத்திய வனத்துறையிடம் இருந்து சில அனுமதி தவிர மீதமுள்ள அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.