ADDED : டிச 09, 2025 04:51 AM

சபரிமலை: 'ரோப்கார்' எனப்படும் கம்பியில் இயங்கும் போக்குவரத்து சேவையை சபரிமலையில் செயல்படுத்த, மொத்தம் 80 மரங்கள் வெட்டப்பட வேண்டும் என, 'ட்ரோன்' மூலம் கணக்கிடப்பட்டுள்ளது.
பம்பையில் இருந்து 5 கி.மீ., துாரத்தில் மலை மீது அமைந்துள்ள சபரிமலை சன்னிதானத்திற்கு பொருட்கள் கொண்டு செல்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது.
துவக்கத்தில் கழுதை மீது கொண்டு செல்லப்பட்ட பொருட்கள், தற்போது டிராக்டர்களில் கொண்டு செல்லப்படுகின்றன. இது, பக்தர்களின் பயணத்துக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. இதனால், 'ரோப்கார்' போக்குவரத்து சேவை அமைக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்து பலகட்ட பணிகள் முடிவடைந்துள்ளன.
பம்பை ஹில்டாப்பில் இருந்து சன்னிதானம் வரை 2.7 கி.மீ., துாரத்திற்கு 271 கோடி ரூபாய் செலவில், ரோப்காருக்கான கேபிள்கள் அமைக்கப்படுகின்றன. காட்டின் உட்பகுதியில் மொத்தம் ஐந்து துாண்கள் நிறுவப்படும்.
கேரள உயர் நீதிமன்ற அனுமதியுடன், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் கணக்கெடுக்கப்பட்டது. அதன்படி மொத்தம், 80 மரங்கள் வெட்டப்பட வேண்டும். இன்று, வனவிலங்கு சரணாலய வாரியத்தின் கூட்டம் நடக்கிறது. இதில் முடிவு எடுக்கப்படும்.
அடுத்த மாதம் நடக்கவுள்ள மகரஜோதியின் போது, ரோப்காருக்கான கேபிள்கள் அமைக்க அடிக்கல் நாட்டப்படும். பம்பையில் இருந்து சரக்குகள் கொண்டு செல்வற்காக இது நிறுவப்பட்டாலும் நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், அவசர சிகிச்சை தேவைப்படுவோர் ரோப்கார் சேவையை பயன்படுத்தலாம்.

