ஆந்திரா போலீஸ் ஸ்டேஷனில் ரவுடிக்கு கிடைத்த ராஜமரியாதை
ஆந்திரா போலீஸ் ஸ்டேஷனில் ரவுடிக்கு கிடைத்த ராஜமரியாதை
ADDED : நவ 11, 2024 04:08 AM

விஜயவாடா: ஆந்திராவில் கைதான ரவுடிக்கு, போலீஸ் ஸ்டேஷனில் சகல வசதியுடன் ராஜமரியாதை செய்தது வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, எஸ்.ஐ., உட்பட ஏழு பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி அனில்குமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர், சமீபத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது குடும்பத்தாரை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். தெலுங்கு தேசம் கட்சியினர் அளித்த புகாரைத் தொடர்ந்து அனில் குமாரை போலீசார் கைது செய்தனர்.
ராஜமகேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், சமீபத்தில் வேறொரு வழக்கு விசாரணைக்காக மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டார். லாக் - அப்பில் வைத்து விசாரணை நடத்தப்பட வேண்டிய அனில் குமாருக்கு, போலீஸ் ஸ்டேஷனில் ராஜ மரியாதை அளிக்கப்பட்டது.
அவர் படுப்பதற்கு பாய், தலையணை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அருகில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று மதிய உணவு சாப்பிட வைத்ததாகவும் போலீசார் மீது புகார் கூறப்பட்டது.
அனில் குமார், நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சத்தமாக போலீசாருக்கு உத்தரவிடும் காட்சிகளும், போலீஸ் ஸ்டேஷனில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகின. இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து, ராஜமகேந்திரவரம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய சப் - இன்ஸ்பெக்டர்கள் உட்பட ஏழு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து குண்டூர் எஸ்.பி., சதிஷ்குமார் நேற்று கூறுகையில், ''அனில் குமாருக்கு சுவாச கோளாறு, நீரிழிவு நோய் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதால், அவருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
''இதைத் தொடர்ந்து அவருக்கு படுக்கை வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மற்றபடி ராஜமரியாதை உபசரிப்பு எதுவும் அவருக்கு வழங்கப்படவில்லை,'' என்றார்.