போலீஸ்காரரை கத்தியால் தாக்கிய ரவுடி சுட்டு பிடிப்பு
போலீஸ்காரரை கத்தியால் தாக்கிய ரவுடி சுட்டு பிடிப்பு
ADDED : டிச 27, 2024 05:41 AM

அத்திப்பள்ளி: கொலை முயற்சி வழக்கில் கைது செய்த போது, போலீஸ்காரரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி, துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.
பெங்களூரு ரூரல், ஜிகனியை சேர்ந்த ரவுடி மனோஜ். கடந்த மாதம் 25ம் தேதி இவரை, எதிர்தரப்பு ரவுடி கும்பலை சேர்ந்த சுனில், 32, அவரது கும்பல் முன்விரோதத்தில் கத்தி, அரிவாளால் தாக்கியது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிர் பிழைத்தார். தாக்குதல் குறித்த புகாரில், ஜிகனி போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர்.
சுனில், அவரது கூட்டாளிகள் தலைமறைவாகினர். அவர்களை பற்றிய தகவல் தெரிந்தால் கூறும்படி, அத்திப்பள்ளி, ஆனேக்கல் போலீசாருக்கு, ஜிகனி போலீசார் தெரிவித்துஇருந்தனர்.
இந்நிலையில் அத்திப்பள்ளி பண்டாபுரா பகுதியில் சுனில் சுற்றுவதாக, இன்ஸ்பெக்டர் ராகவ் கவுடாவிற்கு தகவல் கிடைத்தது.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு அங்கு சென்ற, ராகவ் கவுடா தலைமையிலான போலீசார், பாழடைந்த வீட்டில் துாங்கி கொண்டு இருந்த சுனிலை கைது செய்தனர். அவரை ஜீப்பில் ஏற்ற அழைத்து சென்றனர்.
அப்போது போலீஸ்காரர் வினயை, சுனில் கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்றார்.
அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் ராகவ் கவுடா, துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு, சரண் அடைய எச்சரித்தார். சுனில் கேட்கவில்லை. இதனால், அவரது வலது காலில் துப்பாக்கியால் சுட்டார்.
குண்டு துளைத்ததில் சுருண்டு விழுந்தார். அவர் கைது செய்யப்பட்டார். அவரையும், காயம் அடைந்த போலீஸ்காரர் வினயையும், அத்திப்பள்ளி அரசு மருத்துவமனையில், போலீசார் அனுமதித்தனர்.