ADDED : பிப் 05, 2025 06:53 AM

சர்ஜாபூர்: ரியல் எஸ்டேட் முகவர் கொலை வழக்கில், துப்பாக்கியால் சுட்டு ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு, தொம்மசந்திராவில் வசித்தவர் வெங்கடேஷ், 35. ரியல் எஸ்டேட் முகவர். போலீசார் ரவுடிகள் பட்டியலில் இவரது பெயர் இருந்தது.
கடந்த மாதம் 28ம் தேதி இரவு சர்ஜாபூரில் இருந்து தொம்மசந்திராவுக்கு பைக்கில் வெங்கடேஷ் சென்றார். அவரை அரிவாளால் வெட்டி, மர்ம நபர்கள் கொலை செய்தனர். சர்ஜாபூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ரவுடி சீனிவாஸ், 35, என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.
தொம்மசந்திராவில் பாழடைந்த வீட்டில் சீனிவாஸ் பதுங்கி இருப்பது பற்றி, சர்ஜாபூர் இன்ஸ்பெக்டர் நவீனுக்கு தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நவீன் மற்றும் இரண்டு போலீஸ்காரர்கள் தொம்மசந்திரா சென்றனர். பாழடைந்த வீட்டில் அமர்ந்து சிகரெட் பிடித்து கொண்டிருந்த சீனிவாசை சுற்றி வளைத்தனர்.
அப்போது, தன்னிடம் இருந்த கத்தியால், போலீஸ்காரர் இர்பானை சீனிவாஸ் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினார். வானத்தை நோக்கி துப்பாக்கியால் ஒரு ரவுண்டு சுட்ட இன்ஸ்பெக்டர் நவீன், சரண் அடையும்படி எச்சரித்தார்.
ஆனால், சீனிவாஸ் கேட்கவில்லை. இதனால், அவரது வலது காலில், இன்ஸ்பெக்டர் சுட்டார். சுருண்டு விழுந்தவரை போலீசார் கைது செய்தனர்.
சீனிவாசும், போலீஸ்காரர் இர்பானும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.