ராஜஸ்தான் பாணியில் கோட்டை கட்டிய நபருக்கு ரூ.1 கோடி 'ரோலக்ஸ்' வாட்ச்
ராஜஸ்தான் பாணியில் கோட்டை கட்டிய நபருக்கு ரூ.1 கோடி 'ரோலக்ஸ்' வாட்ச்
ADDED : நவ 02, 2024 12:56 AM

சண்டிகர்: ராஜஸ்தான் பாணியை பின்பற்றி, தன் சொந்த நிலத்தில், பிரமாண்ட கோட்டை கட்டிய ஒப்பந்ததாரருக்கு, பஞ்சாபைச் சேர்ந்த தொழிலதிபர் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'ரோலக்ஸ்' கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கினார்.
பஞ்சாபைச் சேர்ந்தவர் குர்தீப் தேவ் பாத்; தொழிலதிபர். இவர், தனக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தில், ராஜஸ்தானில் உள்ளதை போல பிரமாண்ட கோட்டை கட்ட திட்டமிட்டார்.
இதற்கான ஒப்பந்தத்தை, பஞ்சாபின் ஷாகோட் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ராஜிந்தர் சிங் ரூப்ரா என்பவரிடம் தொழிலதிபர் குர்தீப் தேவ் வழங்கினார். இந்த கட்டடத்தை கட்டடக் கலைஞர் ரஞ்சோத் சிங் என்பவர் வடிவமைத்தார்.
இதன்படி, 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் கோட்டை கட்டும் பணியை ஒப்பந்ததாரர் ராஜிந்தர் சிங் ரூப்ரா துவங்கினார். இடைவிடாது பணியாற்றிய அவர், இரு ஆண்டுகளில் ராஜஸ்தான் பாணியில் கோட்டையை கட்டி முடித்தார்.
இந்த பிரமாண்ட கோட்டையில், பெரிய அரங்குகள், தோட்டங்கள் உள்ளன. பணி முடிந்த பின், கோட்டையைப் பார்த்த தொழிலதிபர் குர்தீப் தேவ் வியந்து போனார். தான் எதிர்பார்த்ததை விட கோட்டையை மிக பிரமாண்டமாக ஒப்பந்ததாரர் ராஜிந்தர் சிங் ரூப்ரா கட்டியிருந்ததாக அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
ராஜிந்தர் சிங் ரூப்ராவை கவுரவிக்கும் நோக்கில், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 'ரோலக்ஸ்' கைக்கடிகாரத்தை தொழிலதிபர் குர்தீப் தேவ் பரிசாக வழங்கினார்.