தமிழகத்தில் ரூ.1,000 கோடி மோசடி: மேற்கு வங்கத்தில் ஈ.டி., ரெய்டு
தமிழகத்தில் ரூ.1,000 கோடி மோசடி: மேற்கு வங்கத்தில் ஈ.டி., ரெய்டு
ADDED : ஜன 03, 2025 04:57 AM

கோல்கட்டா: தமிழகத்தில் 1,000 கோடி ரூபாய் சைபர் மோசடி நடந்தது தொடர்பாக, மேற்கு வங்கத்தில் எட்டு இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
தொழில்நுட்பம் பெருகி வரும் சூழலில், நவீன முறையில் மோசடிகள் நடந்து வருகின்றன. சமீபகாலமாக, 'சைபர் கிரைம்' எனப்படும் டிஜிட்டல் முறையிலான மோசடிகள் பெருகியுள்ளன.
இதில், தொழிலதிபர்கள் முதல் சாமானிய மக்கள் வரை சிக்கி கோடிக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர். அந்தவகையில், தமிழகத்தில் நடந்த சைபர் மோசடியில், 1,000 கோடி ரூபாய் வரை ஏமாற்றப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை, விசாரணை நடத்தி வந்தது. மேற்கு வங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நபர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, மேற்கு வங்கத்தில் எட்டு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். தலைநகர் கோல்கட்டாவில் உள்ள பார்க் வீதி, சால்ட் ஏரி, பாகுஹிஹதி பகுதிகளில் ஐந்து இடங்களிலும், பிற மாவட்டங்களில் மூன்று இடங்களிலும் அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சால்ட் ஏரி பகுதியில் நடந்த சோதனையின் இறுதியில், குற்றச் செயலில் ஈடுபட்ட நபர் ஒருவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் தெரிவிக்கும் தகவல்கள் மற்றும் கைப்பற்றப்படும் ஆவணங்களின் அடிப்படையில், மோசடியால் தமிழகத்தில் பணத்தை இழந்தவர்கள் யார் என்பது தெரியவரும்.