சன்னி லியோன் பெயரில் ரூ.1,000 உதவித்தொகை; சத்தீஸ்கரில் நடந்த மோசடி
சன்னி லியோன் பெயரில் ரூ.1,000 உதவித்தொகை; சத்தீஸ்கரில் நடந்த மோசடி
ADDED : டிச 23, 2024 11:28 AM

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் மாநில அரசால் வழங்கப்படும் ரூ.1,000 உதவித் தொகையை, சன்னி லியோன் பெயரில் மோசடி செய்து வாங்கிய நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சத்தீஸ்கரில் ஆட்சி செய்து வரும் பா.ஜ., அரசின் சார்பில் மஹ்தாரி வந்தன் யோஜனா என்ற பெயரில் திருமணமான பெண்களுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்று வரும் நிலையில், பயனாளிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், பாஸ்டர் மாவட்டம் தலுர் கிராமத்தைச் சேர்ந்த விரேந்திரா ஜோஷி என்பவர் சன்னி லியோன் பெயரில் போலி வங்கிக் கணக்கை தொடங்கி, மாதாமாதம் ரூ.1,000 உதவித் தொகை வாங்கி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக, அந்த வங்கிக் கணக்கிற்கான உதவித் தொகை நிறுத்தப்பட்டதுடன், விரேந்திரா ஜோஷி மீது போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஆளும் பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.
'மஹ்தாரி வந்தன் யோஜனா திட்டத்தில் பயனடையும் 50 சதவீதம் பயனாளிகள் போலி கணக்குகள் தான்' என்று மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலடி கொடுத்த பா.ஜ., துணை முதல்வர் அருண் சாவ், 'சத்தீஸ்கர் மாநில பெண்கள் மாதாந்திர உதவித்தொகையை பெறுவது காங்கிரஸ் கட்சிக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இதனை வழங்க முடியாத வேதனை தான்,' என்றார்.

