ADDED : ஜூலை 03, 2025 12:40 AM

மும்பை: மும்பையில், வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி, மூதாட்டியிடம் ஆறு ஆண்டுகளாக 1.15 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மஹாராஷ்டிராவின் மும்பை ஒர்லி பகுதியில், 70 வயது மூதாட்டி வசிக்கிறார். அரசு ஊழியரான இவரது கணவர் இறந்துவிட்டார்.
இந்நிலையில், கடந்த 2019 மே மாதம் மூதாட்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பெண், தான் வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி பேசிஉள்ளார்.
அப்போது, இறந்த உங்கள் கணவரின் பணத்தை எங்கள் அலுவலகம் திருப்பி தர முடிவு செய்துள்ளது. ஆனால் உங்கள் கணவர் வரி பாக்கி வைத்திருப்பதால், நாங்கள் தரும் வங்கி கணக்கில் அந்த தொகையை செலுத்தும்படி கூறியுள்ளார்.
இதை நம்பி அந்த மூதாட்டி, கடந்த ஆறு ஆண்டுகளாக, 50 முறை அந்த வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியுள்ளார். இவ்வாறு, 1.15 கோடி ரூபாய் செலுத்திய பிறகும் வருமான வரித்துறையிடம் இருந்து மூதாட்டிக்கு எந்த பணமும் திரும்ப கிடைக்கவில்லை.
இது குறித்து உறவினரிடம் தெரிவித்ததை அடுத்து அவர் தந்த ஆலோசனைப்படி, தாதர் போலீசில் மூதாட்டி புகார் அளித்தார். மோசடி கும்பல் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த கும்பலை தேடி வருகின்றனர்.