லஞ்சம் வாங்கிய அதிகாரிகளிடம் ரூ.11.64 கோடி பறிமுதல்
லஞ்சம் வாங்கிய அதிகாரிகளிடம் ரூ.11.64 கோடி பறிமுதல்
ADDED : மார் 29, 2025 02:59 AM
புதுடில்லி : பீஹார் மாநில எரிசக்தித்துறையின் முதன்மை செயலராக இருந்த, 1997ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வான சஞ்சீவ் ஹான்ஸ் மீது, அந்த மாநில போலீசின் சிறப்பு பிரிவினர், வருமானத்திற்கு அதிகமாக லஞ்சம் வாங்கி குவித்ததாக வழக்கு பதிவு செய்தனர்.
அவர் மீதான பண மோசடி வழக்கை, மத்திய அரசின் அமலாக்க துறை விசாரிக்கிறது. அந்த வழக்குடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் ஏழு பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று முன்தினம் அமலாக்க துறை சோதனை மேற்கொண்டது.
பீஹார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து, அமலாக்கத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:
பீஹாரில் பல பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், 11.64 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அதிகாரி சஞ்சீவ் ஹான்ஸ் வசமிருந்து இந்த ஏழு பேரும் பணம் பெற்றுள்ளனர். மேலும், முறைகேடாக டெண்டர்களை திருத்தி, பணத்தை வழங்கியுள்ளனர் என்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், எவ்வளவு பணம், எந்தெந்த அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்டுள்ளது என்பதை இப்போதைக்கு தெரிவிக்க இயலாது. இந்த ஏழு அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.