ரூ.150 கோடி குடிநீர் கட்டணம்: அரசு நிறுவனங்கள் 'டிமிக்கி'
ரூ.150 கோடி குடிநீர் கட்டணம்: அரசு நிறுவனங்கள் 'டிமிக்கி'
ADDED : டிச 24, 2024 06:27 AM

பெங்களூரு: பெங்களூரு குடிநீர் வாரியத்துக்கு அரசு துறைகளே பெரும் சுமையாக உள்ளன. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், 150 கோடி ரூபாய் குடிநீர் கட்டணம் பாக்கி வைத்துள்ளன.
பில் கட்டணம்
பெங்களூரு குடிநீர் வாரியம், பொது மக்களுக்கு மட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளின் அனைத்து அலுவலகங்களுக்கும் குடிநீர் வினியோகிக்கிறது. மாதந்தோறும் கட்டணம் வசூலிக்கிறது. பொது மக்கள் பலரும் முறையாக குடிநீர் கட்டணம் செலுத்துகின்றனர். ஆனால், அரசு துறைகளே கட்டணம் செலுத்தாமல் ஆண்டுக்கணக்கில், 'டிமிக்கி' கொடுத்து வருகின்றன.
பொது மக்கள், தனியார் நிறுவனங்கள் குடிநீர் கட்டணம் செலுத்தா விட்டால், இணைப்பை துண்டித்து பில் கட்டணத்தை வசூலிக்கிறது. அரசு துறைகளிடம் வசூலிக்க முடியாமல் குடிநீர் வாரியம் திணறுகிறது.
நெருக்கடி
ஏற்கனவே குடிநீர் வாரியம் பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறது. ஆண்டு தோறும் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால், பல ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் உயர்த்தவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு, இதுவும் ஒரு காரணம்.
இது குறித்து பெங்களூரு குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய, மாநில அரசுகளின் துறைகள் 97 கோடி ரூபாய் குடிநீர் கட்டணம் பாக்கி வைத்துள்ளன. வட்டியுடன் 150 கோடி ரூபாய் வர வேண்டியுள்ளது.
போலீஸ் துறை, மத்திய அரசின் ரயில்வே துறை, பெங்களூரு மாநகராட்சியின் நீச்சல் குளங்களுக்கு வினியோகிக்கும் நீருக்கு, கட்டண பாக்கி உள்ளது.
நோட்டீஸ்
கல்வித்துறை 10 கோடி ரூபாய், சுகாதாரத்துறை 3 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன. அரசின் நிதியுதவி இல்லாமல், குடிநீர் வாரியம் செயல்படுகிறது.
தனக்கு கிடைக்கும் வருவாயை கொண்டு, அனைத்து பணிகளையும் நிர்வகிக்கிறது. அரசு துறைகளே பெருமளவில் குடிநீர் கட்டணம் பாக்கி வைத்தால், குடிநீர் வாரியத்தை எப்படி நிர்வகிப்பது.
குடிநீர் வாரியம், 10.37 லட்சம் குடிநீர் இணைப்புகள் அளித்துள்ளது. இதில் 8.55 லட்சம் குடியிருப்புகள், 1.82 லட்சம் தொழிற்சாலைகள், வர்த்தக இணைப்புகளாகும். குடிநீர் வாரிய பொருளாதாரம் மேம்பட குடிநீர் கட்டணத்தை உயர்த்துவது கட்டாயமாகும். இது குறித்து துணை முதல்வர் சிவகுமாரே கூறியிருந்தார்.
அரசு துறைகள் பாக்கி வைத்துள்ள குடிநீர் கட்டண பாக்கியை செலுத்தினால், பொருளாதார நெருக்கடியை சமாளிக்கலாம். ஆனால் பல முறை நோட்டீஸ் அனுப்பியும், இதுவரை கட்டண பாக்கியை செலுத்தவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.