ADDED : பிப் 01, 2025 11:25 PM

நடுத்தர மக்களுக்கு வீடு கட்டித் தர ஒப்பந்தம் செய்யும் பல நிறுவனங்கள், கட்டுமானத்தின் போதே நிதி நெருக்கடியில் சிக்கி குறித்த காலத்திற்குள் பணிகளை முடித்து வீடுகளை ஒப்படைப்பதில்லை.
இந்த பிரச்னையை, மத்திய அரசு வலியுறுத்தியபடி, எஸ்.பி.ஐ., வென்ச்சர்ஸ் நிறுவனம் கையாண்டது, 2019ல், 'ஸ்வாமிஹ்' என்ற நிதி திட்டம் அமலானது.
இந்த திட்டத்தின் முதல் கட்டத்தில், 15,530 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. அது, 'ரெரா' எனப்படும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவுபெற்ற வீடு கட்டுமான திட்டங்களுக்கு வழங்கப்பட்டது. அதை பயன்படுத்தி, 50,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஒப்படைப்பட்டன; 40,000 வீடுகளை இந்த ஆண்டில் ஒப்படைக்கப்பட உள்ளன.
தொடர்ந்து, 'ஸ்வாமிஹ் நிதி 2' திட்டம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது; 15,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 1,00,000 வீடுகளின் கட்டுமானத்தை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.