கனடாவில் ரூ.173 கோடி தங்கம் கொள்ளை: சண்டிகரில் அப்பாவியாக வாழும் கில்லாடி
கனடாவில் ரூ.173 கோடி தங்கம் கொள்ளை: சண்டிகரில் அப்பாவியாக வாழும் கில்லாடி
ADDED : பிப் 16, 2025 01:44 AM

சண்டிகர்: வட அமெரிக்க நாடான கனடாவை உலுக்கிய, 173 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளி, சண்டிகரில் அப்பாவியாக வசித்து வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜுரிச்சில் இருந்து, வட அமெரிக்க நாடான கனடாவின் டெரோன்டாவுக்கு கடந்த 2023 ஏப்., 17-ல் வந்த 'ஏர் கனடா' சரக்கு விமானம் ஒன்றில், 173 கோடி ரூபாய் மதிப்பிலான 400 கிலோ சுத்த தங்கம், 22 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் வந்தன.
பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த இவற்றை, போலி ஆவணங்களை கொடுத்து, கன்டெய்னர் லாரி வாயிலாக மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். கனடாவை உலுக்கிய இந்த கொள்ளை வழக்கை, அந்நாட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்காகவே அமைக்கப்பட்ட 20 போலீஸ் அதிகாரிகளைக் கொண்ட தனிப்படை நடத்திய விசாரணையில், ஏர் கனடா விமான நிறுவன ஊழியர்கள் உட்பட ஒன்பது பேருக்கு நேரடி தொடர்பு இருப்பது தெரிந்தது.
இந்த வழக்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பரம்பால் சித்து, பிரசாத் உட்பட ஆறு பேர் கடந்த ஆண்டு கைதாகினர்.
கொள்ளை நடந்தபோது, ஏர் கனடா மேலாளராக இருந்த சிம்ரன் ப்ரீத் பனேசர், 32, முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். ஆனால், அவர் கனடாவில் இருந்து தப்பிவிட்டார்.
இந்நிலையில், தற்போது அவர், நம் நாட்டின் சண்டிகரில் வசித்து வரும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எதுவுமே தெரியாத அப்பாவி போன்று, தன் மனைவி ப்ரீத்தி பனேசர் மற்றும் குடும்பத்துடன் வாடகை வீட்டில் அவர் வசித்து வருகிறார்.
சிம்ரன் ப்ரீத் பனேசரின் மனைவி ப்ரீத்தி பனேசர், 'மிஸ் இந்தியா உகாண்டா' பட்டம் பெற்ற அழகி என கூறப்படுகிறது. கொள்ளை வழக்கு குற்றவாளி சிம்ரன் ப்ரீத் குறித்து கனடா போலீசாருக்கு விரைவில் தகவல் தெரிவிக்கப்படும் என, சண்டிகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.