ரூ.186 கோடி வரி நிலுவை பதஞ்சலிக்கு சாதகமான தீர்ப்பு
ரூ.186 கோடி வரி நிலுவை பதஞ்சலிக்கு சாதகமான தீர்ப்பு
ADDED : பிப் 20, 2025 11:36 PM

புதுடில்லி:'பதஞ்சலி புட்ஸ்' நிறுவனம், 186 கோடி ரூபாய் வரி பாக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ம.பி.,யின் இந்துாரை தலைமையிடமாக கொண்ட நுகர்பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பதஞ்சலி புட்ஸ், 186 கோடி ரூபாய் வரி நிலுவை வைத்திருப்பதாக, வருமான வரி ஆணையர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.
வருமான வரி துறையின் நோட்டீஸ், கடனை திருப்பிச் செலுத்தாத நபர், திருப்பிச் செலுத்தும் திறன் கொண்டவரா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் திவால் நடைமுறைக்கு முந்தைய மதிப்பீட்டு காலத்தோடு தொடர்புடையது என்பதால், ஏற்கனவே தேசிய கம்பெனிகள் சட்ட வாரியம் இதை நிராகரித்து இருந்தது.
இதை தொடர்ந்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வருமான வரித்துறை மேல்முறையீடு செய்திருந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் 15ம் தேதி இதை தள்ளுபடி செய்துள்ளது.
ஆனால், இது குறித்த விபரம், கடந்த 18ம் தேதி, 'டேக்ஸ்மேன்' இணையதளத்தில் வெளியான பின்னரே, பதஞ்சலி நிறுவனத்துக்கு தெரியவந்துள்ளது. நேற்று சந்தையில் பதஞ்சலி நிறுவனம் இந்த தகவலை பகிர்ந்ததையடுத்து, அந்நிறுவன பங்குகள் 2 சதவீதம் அளவுக்கு உயர்ந்தன.

