ரூ.1.98 கோடி திமிங்கல எச்சம் பறிமுதல்: 3 பேர் கைது
ரூ.1.98 கோடி திமிங்கல எச்சம் பறிமுதல்: 3 பேர் கைது
ADDED : மார் 12, 2024 11:55 PM

பீதர் : கோவாவில் இருந்து பீதருக்கு, காரில் கடத்தி வரப்பட்ட 1.98 கோடி ரூபாய் மதிப்பிலான, திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மஹாராஷ்டிராவின் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
'ஆம்பர் கிரீஸ்' எனும் திமிங்கல எச்சத்தை பயன்படுத்தி, வாசனை திரவியங்கள், மருத்துவ பொருட்கள் தயாரிக்க முடியும். திமிங்கில எச்சத்துக்கு சர்வதேச சந்தையில் விலையும் அதிகம்.
இதனால் கடலுக்குள் சென்று திமிங்கலங்களை கொன்று, அதன் எச்சத்தை எடுத்து வந்து விற்பதால், இந்தியா உட்பட பல நாடுகளில், திமிங்கல எச்சம் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் சட்டவிரோதமாக விற்பனை நடக்கிறது.
இந்நிலையில், கர்நாடகாவின் வடமாவட்டமான பீதர் கலசந்தே பகுதியில் நேற்று முன்தினம் இரவு, போலீசார் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த காரை நிறுத்தி, சோதனையிட்ட போது, ஒரு கிலோ 98 கிராம் திமிங்கல எச்சம் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் பறிமுதல் செய்தனர்.
சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு 1.98 கோடி ரூபாய் ஆகும். திமிங்கல எச்சத்தை கடத்தியதாக, மஹாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் பெயர், மற்ற விபரங்கள் வெளியாகவில்லை. விசாரணை நடக்கிறது.
