ADDED : டிச 26, 2024 02:18 AM

ஹைதராபாத்: தெலுங்கானாவில், தியேட்டர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன், 2 கோடி ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான, புஷ்பா - 2: தி ரூல் திரைப்படம் கடந்த 5ல் வெளியானது. ஹைதராபாதில் உள்ள சந்தியா தியேட்டரில் இந்த படத்தின் சிறப்பு காட்சி டிச., 4ல் திரையிடப்பட்டது.
திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்க்க நடிகர் அல்லு அர்ஜுனும் தியேட்டருக்கு வந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி, 35, என்ற பெண் உயிரிழந்தார்.
அவரது 8 வயது மகன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன், ஜாமினில் வெளியே வந்தார்.
இந்நிலையில், உயிர்இழந்த ரேவதியின் குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன், 1 கோடி ரூபாயும், திரைப்பட இயக்குனர் சுகுமார் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் தலா 50 லட்சம் ரூபாய் என மொத்தம் 2 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க உள்ளதாக நேற்று அறிவித்துள்ளனர்.

