அசாமில் தாசில்தாரிடம் ரூ.2 கோடி நகை, ரொக்கம் பறிமுதல்
அசாமில் தாசில்தாரிடம் ரூ.2 கோடி நகை, ரொக்கம் பறிமுதல்
ADDED : செப் 17, 2025 12:38 AM

குவஹாத்தி : அசாமில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த பெண் தாசில்தாரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது இடங்களில் இருந்து, 92 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 1 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்தனர்.
அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு உள்ள காம்ருப் மாவட்டம், கோராய்மாரி பகுதியின் தாசில்தாராக நுபுர் போரா, 35, பணியாற்றி வந்தார்.
இவரது வட்டத்தில் சிறுபான்மையினர் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக நடந்த சொத்து விற்பனைகளில் முறைகேடுகள் நடப்பது கண்டறியப்பட்டது. ஹிந்துக்களின் நிலங்களை இது போல் முறைகேடாக கைமாற்றியது தெரிந்தது.
மேலும், அவரது வட்டத்தில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் குவிந்தன. இதனால் தாசில்தார் நுபுர் போரா மற்றும் அவருக்கு உதவியாளராக செயல்பட்ட மற்றொரு அரசு ஊழியரான லாட் மண்டல் சுரஜித் டெகா ஆகியோர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் கண்காணிப்பு வளையத்தில் இருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன் தினம் குவஹாத்தியில் உள்ள நுபுர் போராவின் வீடு, மற்றும் பார்பெட்டாவில் உள்ள அவரது வாடகை வீடு ஆகியவற்றில் சோதனை நடந்தது.
இதில், கணக்கில் வராத 92 லட்சம் ரூபாய் ரொக்கம், 1 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நுபுர் போராவை கைது செய்தனர்.
இதே போல் நுபுர் போ ராவுக்கு உதவிய சுரஜித் டெகாவின் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். இதில், பார்பெட்டாவில் நுபுர் போராவுடன் இணைந்து பல சொத்துகளை வாங்கியதற்கான ஆவணங்கள் சிக்கின.