மது கொள்முதலில் ரூ.2,000 கோடி ஊழல் : மாஜி முதல்வர் மகன் கைது
மது கொள்முதலில் ரூ.2,000 கோடி ஊழல் : மாஜி முதல்வர் மகன் கைது
ADDED : ஜூலை 18, 2025 11:43 PM

ராய்பூர் : மதுபான ஊழல் தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யாவை, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
சத்தீஸ்கரில், முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2018 - 23 வரை பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அப்போது, 2019 - 22 காலகட்டத்தில், மதுபான கொள்முதலில் பெரும் அளவில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதில் கிடைத்த பல கோடி ரூபாய், பூபேஷ் பாகேல் மகன் சைதன்யாவுக்கு தொடர்புடைய நிறுவனங்களுக்கு கைமாறியதாக கூறப்பட்டது. கிட்டத்தட்ட 2,100 கோடி ரூபாய்க்கு மதுபான ஊழல் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
வருமான வரித் துறை அளித்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை இந்த ஊழல் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது.
அதை உச்ச நீதிமன்றம் ஏற்காத நிலையில், மீண்டும் மாநில பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் உதவியுடன் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தது. அதில், அரசுக்கு எந்தவொரு கலால் வரியையும் செலுத்தாமல் மதுபான உற்பத்தி ஆலையில் இருந்து நேரடியாக அரசு மதுபான கடைகளுக்கு மதுபானங்கள் சப்ளை செய்யப்பட்டதாகவும், கணக்கில் வராத இந்த விநியோகத்தால், பல கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் அமலாக்கத் துறை கண்டறிந்தது.
இதையடுத்து துர்க் மாவட்டத்தின் பிலாய் நகரில் உள்ள சைதன்யாவின் வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் முக்கிய ஆவணங்கள் சிக்கிய நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் சைதன்யாவை கைது செய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அவரது வீட்டின் முன் குவிந்த காங்கிரஸ் தொண்டர்கள், பிறந்தநாள் தினத்தில் சைதன்யாவை கைது செய்வதா என கேள்வி எழுப்பி அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
மதுபான ஊழல் தொடர்பாக இதுவரை நடந்த விசாரணையின் அடிப்படையில், முறைகேட்டில் தொடர்புடையவர்களின் 205 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.