பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் நிதி : ஹரியானாவில் அள்ளி விடுது காங்கிரஸ்!
பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் நிதி : ஹரியானாவில் அள்ளி விடுது காங்கிரஸ்!
ADDED : செப் 18, 2024 05:48 PM

சண்டிகர்: ''ஹரியானாவில் பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் நிதி வழங்குவோம். முதியோர், விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பென்சன் வழங்கப்படும் ,'' என காங்கிரஸ் வாக்குறுதி அளித்து உள்ளது.
ஹரியானா சட்டசபைக்கு அக்., 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டார்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
*ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். ரூ.25 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சைக்கு அனுமதி
*18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். காஸ் சிலிண்டர் மானியமாக ரூ.500 வழங்குவோம்.
*மாநிலத்தில் காலியாக உள்ள ரூ.2 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். போதையில்லா மாநிலத்தை உருவாக்குவோம்.
*முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவை பென்சன் ஆகியவை ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்படுவதுடன், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்.
*மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம். கிரீமி லேயருக்கான வரம்பை ரூ.10 லட்சமாக அதிகரிப்போம்.
*விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும்.
*ஏழைகளுக்கு ரூ.3.5 லட்சம் மதிப்பு இலவச வீடு வழங்குவோம் என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்து உள்ளது.