மகளிருக்கு மாதம் ரூ.2,100: ஜார்க்கண்ட் பா.ஜ., வாக்குறுதி
மகளிருக்கு மாதம் ரூ.2,100: ஜார்க்கண்ட் பா.ஜ., வாக்குறுதி
ADDED : அக் 06, 2024 12:29 AM

ராஞ்சி: 'ஜார்க்கண்டில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் 2,100 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும்' என, அக்கட்சி வெளியிட்டுள்ள முதற்கட்ட தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவதை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி மாநில பா.ஜ., தலைவர் பாபுலால் மராண்டி, கட்சியின் தேர்தல் அறிக்கையாக ஐந்து வாக்குறுதிகளை முதற்கட்டமாக நேற்று வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
சட்டசபை தேர்தலில் பா.ஜ., வென்றால் மகளிருக்கு மாதந்தோறும் 2,100 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். அனைவருக்கும் இரண்டு வீடு கட்டித்தரப்படும். ஆண்டுக்கு இரண்டு சிலிண்டர்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இது தவிர, சிலிண்டர், 500 ரூபாய்க்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.