டில்லியில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் பெண்களுக்கு ரூ.2,100 உதவித்தொகை
டில்லியில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் பெண்களுக்கு ரூ.2,100 உதவித்தொகை
ADDED : டிச 13, 2024 12:39 AM
புதுடில்லி, டிச. 13-
டில்லி பெண்களின் வங்கி கணக்குகளில் மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை செலுத்தப்படும் என தெரிவித்த, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் இந்த தொகை 2,100 ரூபாயாக உயர்த்தப்படும் என்று உறுதி அளித்தார்.
இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கூறியதாவது:
டில்லியில் உள்ள பெண்களின் வங்கிக் கணக்குகளில் மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை செலுத்துவோம் என, ஏற்கனவே அறிவித்து இருந்தோம்.
இந்த திட்டத்துக்கு, முதல்வர் ஆதிஷி தலைமையிலான அமைச்சரவைக் குழு நேற்று ஒப்புதல் அளித்துவிட்டது. இதன் வாயிலாக இத்திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது.
இன்னும், 10 - 15 நாட்களில் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும்.
எனவே, உதவித் தொகையை இப்போது அளிக்க முடியாது.
மேலும், விலைவாசி உயர்வு காரணமாக 1,000 ரூபாய் உதவித்தொகை போதுமானதாக இருக்காது என பெண்கள் பலர் தெரிவித்தனர்.
இதை மனதில் வைத்து, இந்த தொகையை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் இந்த உதவித்தொகை, 2,100 ரூபாயாக உயர்த்தப்படும்.
இதை தேர்தலுக்கான இலவசம் என பா.ஜ., குற்றஞ்சாட்டலாம்.
ஆனால், இது சமூகத்தை வலுப்படுத்தும் முயற்சி. இதற்கான நிதி எங்கிருந்து வரும் என, பா.ஜ.,வினர் கேள்வி எழுப்புவர். நான் ஒரு மேஜிக் கலைஞன்.
கணக்குகளில் எனக்கு மேஜிக் செய்ய தெரியும் என்பதை பா.ஜ.,வினருக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.