கர்ப்பிணிகளுக்கு ரூ.21 ஆயிரம், முதியோர் பென்சன்: டில்லி தேர்தலுக்கு பா.ஜ., வாக்குறுதி
கர்ப்பிணிகளுக்கு ரூ.21 ஆயிரம், முதியோர் பென்சன்: டில்லி தேர்தலுக்கு பா.ஜ., வாக்குறுதி
ADDED : ஜன 17, 2025 03:59 PM

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், கர்ப்பிணிகளுக்கு ரூ.21 ஆயிரம் , சிலிண்டருக்கு ரூ. 500 மானியம், முதியோர் பென்சன் வழங்கப்படும் என பா.ஜ., வாக்குறுதி அளித்து உள்ளது.
மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட டில்லி சட்டசபைக்கு பிப்.,5ல் ஒரே கட்டமாக தேர்தலும், பிப்.,8 ல் ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி - பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரசும் தனித்து போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் வாக்குறுதியை அறிவித்து உள்ளன.
இந்நிலையில், இன்று பா.ஜ.,வும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
*60-70 வயதுடைய மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.2,500 பென்சன்
*70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூ.3,000 பென்சன்
*கர்ப்பிணிகளுக்கு ரூ.21 ஆயிரம் நிதி
*பெண்களுக்கு மாதம் ரூ.2,500
*ரூ.500 மானிய விலையில் காஸ் சிலிண்டர்
*ரூ. 5 லட்சம் மருத்துவ காப்பீடு
*ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகையின் போது இலவச காஸ் சிலிண்டர்கள்
*அடல் கேண்டீன்கள் மூலம் ரூ.5க்கு ஊட்டச்சத்து மிக்க உணவு என பல வாக்குறுதிகளை அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக பா.ஜ., தேசியத் தலைவர் நட்டா கூறியதாவது: ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டத்தை டில்லியில் அமல்படுத்துவது என முதல் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இதனை ஆம் ஆத்மி அரசு எதிர்த்து வந்தது. டில்லியில் தற்போது அமலில் உள்ள திட்டங்கள் அனைத்தும் நடைமுறையில் இருக்கும். ஆம் ஆத்மியின் ஊழல்களை முடிவுக்கு கொண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.