ADDED : ஜூன் 07, 2025 01:24 AM

போபால்: மத்திய பிரதேசத்தில், அரசு கோப்புகளில், 50,000 ஊழியர்கள் இருப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம் விடுவிக்கப்படாதது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு அரசின் பல்வேறு துறைகளில், 4 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
இவர்களில், 50,000 ஊழியர்களின் பெயர்கள் அரசு கோப்புகளில் உள்ள நிலையில், கடந்த ஆறு மாதங்களாக அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த ஊழியர்களுக்கு பிரத்யேக அடையாள எண், பணியாளர் குறியீடு இருந்தும் சம்பளம் வழங்கப்படாதது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஊழியர்கள் சம்பளம் பெறாத விடுப்பில் இருக்கின்றனரா? அல்லது 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனரா? அல்லது போலி ஊழியர்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி இந்த ஊழியர்கள் போலியாக இருந்தால், அவர்களின் சம்பளத்துக்காக ஒதுக்கப்பட்ட, 230 கோடி ரூபாய் என்னவானது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, மாநிலம் தழுவிய சரிபார்ப்பு நடைமுறையை கருவூல துறை துவங்கி உள்ளது. அங்கீகரிக்கப்படாத ஊழியர்கள் பணிபுரியவில்லை என சான்றளிக்கும்படி, துறை தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், '2024 டிசம்பர் நிலவரப்படி, 50,000 அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இவர்களில், 40,000 பேர் வழக்கமான ஊழியர்கள், 10,000 பேர் தற்காலிக ஊழியர்கள்.
'ஒருவேளை இவர்கள் பணியில் இருந்து ராஜினாமா செய்திருந்தால், அரசு கோப்புகளில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. 50,000 ஊழியர்கள் பெயரில் போலி கணக்கு துவங்கப்பட்டு, அதன் வாயிலாக, 230 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது. தீவிர விசாரணைக்கு பின்னரே உண்மை தெரிய வரும்' என்றனர்.