ADDED : ஜன 01, 2025 12:56 AM

பெங்களூரு; பெங்களூரு, தாவணகெரேயை சேர்ந்தவர் ரக் ஷித், 30. இவர், சொக்கனஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் போதைப் பொருள் விற்பனை செய்வதாக சி.சி.பி., போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார், அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இதில், 3.5 கிலோ ஹைட்ரோ கஞ்சா, 16.5 கிலோ கஞ்சா, 40 எல்.எஸ்.டி., ஸ்டாம்ப்கள், 130 கிராம் சரஸ், 2.3 கிராம் எம்.எம்.டி.ஏ., படிகங்கள் என 2.50 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். 1.30 லட்சம் ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
அவரை கைது செய்து போலீசார், விசாரணை மேற்கொண்டனர். 'டாட்டூ' கலைஞரான இவர், பல நாடுகள், மாநிலங்களில் இருந்தும் விதவிதமாக போதைப் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்து உள்ளார்.
இவருக்கு உதவியாக இருந்தவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடுகின்றனர்.
எலக்ட்ரானிக் சிட்டி: இப்பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து மைசூரு செல்லும் நைஸ் ரோட்டில் ராயசந்திரா அருகே சிக்கட்டகூர் பாலம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த இடத்தில் போலீசார் நடத்திய சோதனையில், கஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
எலஹங்கா நியூடவுன்: போலீசார் நடத்திய சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 15.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 25 முதல் 40 வயது வரையிலான சுபிர், ரோஷன், ஜெயந்த் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜெ.ஜெ., நகர்: போலீசார் நடத்திய சோதனையில், 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 20 கிராம் எம்.எம்.டி.ஏ., பவுடர் வைத்திருந்த ஆதில், அபுதாப் என்ற இருவரை கைது செய்தனர்.