கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு
கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு
ADDED : ஜூன் 24, 2025 07:39 PM
மதுரா:கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த, இரண்டு துப்புரவுத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, தலா 30 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
உ.பி., மாநிலம் மதுரா பிருந்தாவனத்தில் தனியார் விருந்தினர் மாளிகையில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி, 21ம் தேதி மாலை நடந்தது. கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய துப்புரவுத் தொழிலாளர்கள், நரேந்திரா, 38, மற்றும் சோட்டாலால், 40, ஆகிய இருவரும் தொட்டிக்குள் பரவியிருந்த விஷவாயுவை சுவாசித்ததால் உயிரிழந்தனர்.
பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காத ஒப்பந்ததாரர் அமித் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், மதுரா நகராட்சிக் கமிஷனர் கூறியதாவது:
மதுராவில் விஷவாயு சுவாசித்து உயிரிழந்த நரேந்திரா மற்றும் சோட்டாலால் ஆகிய இருவரின் குடும்பத்துக்கும் தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். இருவரும் நகராட்சி ஊழியர்கள் இல்லை. எனினும், இருவரின் குடும்பத்தினரும் தலா, ஒரு கோடி ரூபாய் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர். அதை பரிசீலனை செய்து, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி குறைந்தபட்ச நிவாரணத் தொகை 30 லட்சம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.