UPDATED : பிப் 24, 2024 02:05 AM
ADDED : பிப் 22, 2024 11:48 PM

புதுடில்லி : நான்கு மாநிலங்களில் கவர்னராக பணியாற்றிய, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சத்யபால் மாலிக் வீடுகளில் நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
ஜம்மு - காஷ்மீர் கவர்னராக, 2018 - 2019ம் ஆண்டுகளில் பதவி வகித்த போது, அந்த மாநிலத்தின் நிர்வாகத்தில் ஊழல் நிறைந்திருப்பதை காண முடிந்ததாக, கடந்த ஆண்டு ஏப்ரலில் ஒரு பேட்டியில் சத்யபால் மாலிக் கூறியிருந்தார்; 'இரண்டு கோப்புகளில் கையெழுத்து போட, எனக்கு 300 கோடி ரூபாய் வரை சிலர் லஞ்சம் தர முயன்றனர்' என்றும் அப்போது சொன்னார்.
மாலிக் பதவியில் இருந்த போது, காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் பாயும் செனாப் நதியில், பெரிய நீர் மின் உற்பத்தி திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டது. அதில், விதிமுறைகளை பின்பற்றவில்லை என்ற புகார் எழுந்தது. திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த அரசு அதிகாரிகள் குழு, பழைய டெண்டரை ரத்து செய்து மறுடெண்டர் விட தீர்மானித்தது. ஆனால், அப்படி செய்யாமல், ஏற்கனவே தேர்வு செய்த கம்பெனிக்கே கான்ட்ராக்டை வழங்கியது.இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேலான திட்டச்செலவு உடைய ஒப்பந்தம் என்பதால், கட்டுமான நிறுவனம் எப்படியாவது கவர்னரின் ஒப்புதலை பெற விரும்பியது.
அதற்காக கவர்னருக்கு, 300 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்க முனைந்தது.இது தான் பேட்டியில் மாலிக் தெரிவித்த விவகாரம். காஷ்மீரிலும், டில்லியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த பேட்டி.
உளவு தகவல் அடிப்படையில் உடனே செயல்பட்டு இருந்தால், 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலை தவிர்த்திருக்க முடியும் என்றும், மாலிக் அந்த பேட்டியில் சொன்னார். அதாவது, சாலை மார்க்கமாகச் செல்லும் ஜவான்களை தாக்க, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருந்ததால், ராணுவ விமானங்கள் வாயிலாக ஜவான்களை அழைத்து செல்லலாம் என்று, அவர் ராஜ்நாத் சிங்கிடம் சொன்னாராம். சம்பவம் நடந்த பின், இதை நினைவுபடுத்திய போது பிரதமர் மோடியும், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், தன்னை எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கச் சொன்னதாகவும் தெரிவித்தார்.
ஊழல் ஒழிப்பு குறித்து மோடி உணர்ச்சிகரமாக பேசுவாரே தவிர, அதில் அவருக்கு பெரிய அளவில் ஆர்வம் கிடையாது என்றும் மாலிக் சொல்லி இருந்தார். 'ஊழல் குறித்து நான் பேசிய ஒவ்வொரு கட்டத்திலும், எனக்கு டிரான்ஸ்பர் தான் பரிசாகத் தரப்பட்டது' என்றும் மாலிக் கிண்டலாகச் சொன்னார். பீஹார் அங்கிருந்து கோவா, பின் காஷ்மீர், அடுத்து மேகாலயா என குறுகிய காலத்தில் நான்கு மாநிலங்களில் பணியாற்ற அனுப்பப்பட்டதை அவர் ஆதாரமாகக் காட்டினார்.
மாலிக் அளித்த பேட்டியின் சூடு தணிவதற்குள், காஷ்மீர் மின் திட்டத்தில் சம்பந்தப்பட்ட கம்பெனி மீதும், சில அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. கடந்த மாதம் டில்லி, ஜம்மு - காஷ்மீரில் எட்டு இடங்களில் சோதனை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, டில்லியில் உள்ள மாலிக் வீடு உட்பட, 30 இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.
சோதனை குறித்து மாலிக், சமூக வலைதளத்தில் ஆவேசமாக கருத்து பதிவிட்டார். 'நான்கு நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறேன். இந்த நேரத்தில் சர்வாதிகாரியின் விசாரணை அமைப்பு, என் வீட்டை சோதனையிடுகிறது. நான் ஒரு விவசாயி மகன்; இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன்' என்றார் அவர்.
மேகாலயா கவர்னர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற மறுநாளே, பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக மாலிக் பேட்டி அளித்தார். 'இந்த மத்திய அரசு கொடுத்த வாக்கை நிறைவேற்றாது. ஆகவே, டில்லியில் அடுத்த போராட்டத்துக்கு, அனைத்து விவசாயிகளும் தயாராக வேண்டும்' என அப்போது அவர் அழைப்பு விடுத்திருந்தார்.