300 கோடி ரூபாய் மோசடி செய்தவர் துறவி வேடத்தில் திரிந்தபோது கைது
300 கோடி ரூபாய் மோசடி செய்தவர் துறவி வேடத்தில் திரிந்தபோது கைது
ADDED : செப் 27, 2024 08:16 PM
மதுரா:மஹாராஷ்டிர மாநிலத்தில், வைப்புத் தொகைக்கு அதிக வட்டி தருவதாக ஆயிரக்கணக்கான மக்களிடம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மோசடி செய்தவர், உத்தர பிரதேசத்தின் மதுராவில் துறவி வேடத்தில் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் பாபன் விஸ்வநாத் ஷிண்டே. இவர், 2,000க்கும் மேற்பட்டோரிடம் 300 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தார். ஏராளமான புகார்கள் வந்ததன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.
டில்லி, அசாம், நேபாளம் மற்றும் உத்தர பிரதேசம் என அடுத்தடுத்து இடம் மாறிக் கொண்டே இருந்தார்.
இந்நிலையில், டில்லி அருகே உ.பி.,யின் மதுரா நகரில் துறவி வேடத்தில் விஸ்வநாத் ஷிண்டே திரிவதாக மஹாராஷ்டிர போலீசுக்கு தகவல் கிடைத்தது.
மஹாராஷ்டிராவின் பீட் மாவட்ட போலீஸ் மற்றும் மதுரா பிருந்தாவனம் போலீஸ் இணைந்து கூட்டு நடவடிக்கையில் இறங்கினர்.
கிருஷ்ண பலராமர் கோவில் அருகே துறவி வேடத்தில் உட்கார்ந்து இருந்த பாபன் விஸ்வநாத் ஷிண்டேவை கைது செய்தனர்.
டி.எஸ்.பி., சந்தீப் குமார் சிங் கூறியதாவது:.
மஹாராஷ்டிராவில் வைப்புத்தொகைக்கு அதிக வட்டி தருவதாக கூறி 2,000க்கும் மேற்பட்டோரிடம் 300 கோடி ரூபாய் மோசடி செய்த ஷிண்டே மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதுரா பிருந்தாவனத்தில் துறவி வேடத்தில் இருந்த போது கைது செய்யப்பட்டார். மதுரா தலைமை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து, மஹாராஷ்டிராவின் பீட் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ், மதுரா நீதிமன்றத்தில் இருந்து போக்குவரத்துக் காவலைப் பெற்று, ஷிண்டே மஹாராஷ்டிரா அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.