ADDED : மே 16, 2025 12:24 AM
மும்பை: மஹாராஷ்டிராவின், வசாய் விரார் மாநகராட்சிக்கு சொந்தமான பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், குப்பை கிடங்குக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக குடியிருப்பு கட்டடங்கள் கட்டப்பட்டது கண்டறியப்பட்டது.
இதில், தனியார் கட்டுமான நிறுவனங்கள் மட்டுமின்றி மாநகராட்சி அதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, வசாய் விரார் மாநகராட்சியின் நகர திட்டமாக்கல் பிரிவு துணை இயக்குனர் ஒய்.எஸ்.ரெட்டிக்கு சொந்தமாக மும்பை மற்றும் ஹைதராபாதில் உள்ள, 13 இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
முடிவில், கணக்கில் காட்டப்படாத 9.04 கோடி ரூபாய் ரொக்கம், 23.25 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் என மொத்தம் 32 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதவிர முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.