ரூ.32 லட்சம் லஞ்சம்: ரயில்வே அதிகாரி உள்ளிட்ட 4 பேர் கைது
ரூ.32 லட்சம் லஞ்சம்: ரயில்வே அதிகாரி உள்ளிட்ட 4 பேர் கைது
ADDED : ஏப் 25, 2025 10:20 PM

புதுடில்லி: சத்தீஸ்கரில் ரூ.32 லட்சம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக ரயில்வே மூத்த அதிகாரி உள்ளிட்ட 4 பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் தென் கிழக்கு ரயில்வேயில் சிறிய மற்றும் பெரிய பாலம் கட்டுதல், டிராக் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை தனியார் நிறுவனம் ஒன்று செய்துவருகிறது. பணி முடித்த சான்று மற்றும் புதிய ஒப்பந்தங்களை பெறுவது தொடர்பாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகள், ரயில்வே மூத்த அதிகாரியை சந்தித்து பேசினர். அப்போது, நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படுவதற்கு லஞ்சம் வேண்டும் என அதிகாரி கேட்டு உள்ளார். அந்த பணத்தை குடும்ப உறுப்பினர் பெற்றுக் கொள்வார் என அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த சி.பி.ஐ., அதிகாரிகள் அவர்களை கண்காணித்தனர். இதன்படி ரயில்வே அதிகாரியின் சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள இல்லத்தில் தனியார் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் ரூ.32 லட்சம் லஞ்சப்பணத்தை கொடுத்து உள்ளார். இதனையடுத்து அந்த ரயில்வே அதிகாரி, அவரது குடும்ப உறுப்பினர், தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், அதன் ஊழியர் ஆகிய நான்கு பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். இதனையடுத்து பிலாஸ்பூர், ராஞ்சி உள்ளிட்ட இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி பணம் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
ஐஆர்எஸ் அதிகாரி கைதுவருமானவரி செலுத்துவதை எளிதாக்கவும், அதிகாரிகளின் தலையீட்டை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் லஞ்சம் பெற்றுக் கொண்டு அதிகாரிகள் முறைகேடு செய்வதாக வந்த புகாரை அடுத்து சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் வருமானவரித்துறையில் இணை கமிஷனர் அந்தஸ்தில் பணிபுரியும் ஐ.ஆர்.எஸ்., அதிகாரி மற்றும் ஒருவரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். இது தொடர்பாக டில்லி, மும்பை , தானே உள்ளிட்ட18 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் பல ஆதாரங்கள் சிக்கி உள்ளன. கைது செய்யப்பட்டவர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களின் விவரம் இதுவரை வெளியாகவில்லை.