ரூ.15,000 சம்பளம் வாங்குபவருக்கு ரூ.33 கோடி வருமான வரி விதிப்பு
ரூ.15,000 சம்பளம் வாங்குபவருக்கு ரூ.33 கோடி வருமான வரி விதிப்பு
ADDED : ஏப் 03, 2025 07:31 AM
அலிகார் : உத்தர பிரதேசத்தை சேர்ந்த சொற்ப சம்பளம் வாங்கும் சிலரின் ஆதார் மற்றும் பான் எண்ணை மோசடி நிறுவனங்கள் பயன்படுத்தியதால், அவர்களுக்கு பல கோடி ரூபாய்க்கு வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், அலிகாரைச் சேர்ந்த கரண் குமார், 34, மாதம் 15,000 ரூபாய் சம்பளம் பெறும் ஒப்பந்த பணியில் உள்ளார்.
அவருக்கு சமீபத்தில் வருமான வரித்துறையில் இருந்து 33 கோடி ரூபாய் வரி விதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக நோட்டீஸ் வந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் நிறுவன வழக்கறிஞரிடம் கூறினார். அவர், விபரங்களை ஆராய்ந்ததில் கரண் குமாரின் ஆதார் மற்றும் பான் எண்ணை டில்லியைச் சேர்ந்த, 'மகாவீர் என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனம் பயன்படுத்தியது தெரிந்தது.
இந்நிறுவனம் பல கோடி ரூபாய்க்கு பெட்ரோலிய மற்றும் இரும்பு பொருட்களை வியாபாரம் செய்துள்ளது.
இதே போல் மாதம் 8,500 ரூபாய் சம்பளம் பெறும் மோஹித் குமாருக்கு வருமான வரித்துறை 3.87 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பியதால் குழப்பமடைந்தார். விசாரணையில் எம்.கே., டிரேடர்ஸ் என்ற நிறுவனம், மோஹித்தின் ஆதார் கார்டைப் பயன்படுத்தி தொழில் நடத்தி வருவது தெரிந்தது.
அலிகார் நீதிமன்ற வாசலில் தள்ளு வண்டியில் பழச்சாறு விற்கும் ரயீஸ் அகமது என்பவருக்கு 7 கோடி ரூபாய்க்கு வருமான வரி நோட்டீஸ் வந்துள்ளது.
இவர்கள் அனைவரும் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.

