ஒடிசாவில் கொள்ளையர்களிடம் இருந்து ரூ.3.5 கோடி பறிமுதல்
ஒடிசாவில் கொள்ளையர்களிடம் இருந்து ரூ.3.5 கோடி பறிமுதல்
ADDED : பிப் 03, 2025 02:27 AM

புவனேஸ்வர்:ஒடிசாவில் மதுபான கூடத்திற்குள் புகுந்த முகமூடி அணிந்த நபர்கள், 3.51 கோடி ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற நிலையில், அவர்களில் எட்டு பேரை போலீசார் நேற்று கைது செய்து பணத்தை மீட்டனர்.
ஒடிசா மாநிலம், காலாஹந்தி மாவட்டம், தரம்கரில் உள்ள மதுபான கூடத்திற்குள், கடந்த 30ம் தேதி முகமூடி கொள்ளையர்கள் புகுந்தனர். கத்தி மற்றும் துப்பாக்கியை காட்டி மிரட்டி அங்கிருந்து 3.51 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
அவர்கள் வந்த 'பொலிரோ' கார் எண்ணை குறித்து வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில், அந்த கார் ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியைச் சேர்ந்த ஒருவருடையது என்பது தெரிந்தது. அவர் மீது ஏற்கனவே பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஜார்க்கண்ட் போலீசாரிடமிருந்து கொள்ளையர்களின் தகவல்களை பெற்ற ஒடிசா போலீசார், அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று நடந்த வாகன சோதனையில், கொள்ளையில் ஈடுபட்ட தாஹிர் அன்சாரி, ஹுசைன் கான் உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்க பயன்படுத்திய வாகனம், துப்பாக்கி, அரிவாள், கத்தி மற்றும் 3.51 கோடி ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

