ஆபீஸ் போகாத அம்மாக்களுக்கு சிக்கிமில் ஆண்டுக்கு ரூ.40,000
ஆபீஸ் போகாத அம்மாக்களுக்கு சிக்கிமில் ஆண்டுக்கு ரூ.40,000
ADDED : ஆக 11, 2025 11:35 PM

காங்டாக்: சிக்கிமில், குடும்பத் தலைவியாக வீட்டில் இருக்கும் அம்மாக்களுக்கு, ஆண்டுதோறும் 40,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் துவக்கி வைத்தார்.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி ஆட்சி நடக்கிறது.
இங்கு, அம்மாக்களின் தியாகங்கள், வலிமை, உழைப்பு, பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் ஆக., 10ல், 'ஆமா சம்மான் திவஸ்' எனப்படும் அம்மாக்கள் தினம் கொண்டாட மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், ஆமா சம்மான் திவஸ் திட்டத்தின் கீழ், வீட்டில் இருக்கும் அம்மாக்களுக்கு இரு கட்டங்களாக தலா 20,000 ரூபாய் என, ஆண்டுதோறும் 40,000 ரூபாய் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
பாக்யோங் மாவட்டத்தில் உள்ள ரங்போ விளையாட்டு மைதானத்தில், ஆமா சம்மான் தின கொண்டாட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், 32,000 பெண்களுக்கு, முதற்கட்டமாக, 20,000 ரூபாய் காசோலைகளை வழங்கி, முதல்வர் பிரேம் சிங் தமாங் பேசியதாவது:
ஆமா சம்மான் தினத்தை கொண்டாட முடிவு செய்ததற்கு தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணமுள்ளது. சிக்கிமின் சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையில், குறிப்பாக கடினமான காலங்களில் அம்மாக்கள் எப்போதும் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
மேலும், பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று அவர்கள் தியாகம் செய்துள்ளனர். எங்கள் கட்சியின் பயணம் சிக்கிம் முழுதும் உள்ள அம்மாக்களின் தைரியத்தையும், உறுதியான மனநிலையையும் பிரதிபலிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.