கப்பல் கட்டுமான துறைக்கு ரூ.44,700 கோடி மானியம்; உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்க புதிய முயற்சி
கப்பல் கட்டுமான துறைக்கு ரூ.44,700 கோடி மானியம்; உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்க புதிய முயற்சி
ADDED : டிச 29, 2025 01:41 AM

புதுடில்லி: கப்பல் கட்டும் உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் அத்துறைக்கான உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம், திறன் வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்க, 44,700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு இரண்டு மெகா திட்டங்களை அறிவித்திருந்தது. அதை பயன்படுத்தி கொள்வதற்கான வழிகாட்டுதல்களை அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு கப்பல் கட்டுமான நிதி உதவி திட்டம் மற்றும் கப்பல் கட்டுமான மேம்பாட்டு திட்டம் ஆகிய இரு திட்டங்களை இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தியது. இத்துறைக்கான நிதியுதவி கொள்கை 2015ல் ஏற்கனவே வகுக்கப்பட்டது. தற்போதைய திட்டங்கள் அதன் தொடர்ச்சியாகவும், மேம்படுத்தப்பட்ட வடிவமாகவும் உள்ளன.
நிதியுதவி
இதை செயல்படுத்தும் பொறுப்பு மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. வரும் 2036 வரை, நீண்டகால நோக்கில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.
கப்பல் கட்டுமான நிதி உதவி திட்டத்தின் கீழ், உள்நாட்டில் கப்பல் கட்டும் நிறுவனங்களுக்கு நேரடி நிதியுதவி வழங்கப்படும். கப்பலின் வகை மற்றும் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த உதவி வழங்கப்படும்.
கப்பல் கட்டுமான மேம்பாட்டு திட்டம், நீண்டகால அடிப்படையில் கப்பல் கட்டும் துறையை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 'ஷிப்யார்டு' எனப்படும் கப்பல் கட்டும் தளங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பணியாளர்களுக்கான திறன் வளர்ச்சி ஆகியவை மேற் கொள்ளப்படும். இந்த திட்டத்துக்கான வழிகாட்டுதல்களை மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.
அதில் கூறப் பட்டுள்ளதாவது: தவணை முறை கப்பல் கட்டுமான நிதி உதவி திட்டத்திற்காக 24,736 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், கப்பலின் வகையைப் பொறுத்து, கட்டுமானச் செலவில் 15 முதல் 25 சதவீதம் வரை மத்திய அரசு நிதியுதவி வழங்கும்.
இந்த தொகை, பணிகள் முன்னேறும் கட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, தவணை முறையில் விடுவிக்கப்படும். சிறிய, பெரிய மற்றும் சிறப்பு வகை கப்பல்களுக்கு தனித்தனியாக நிதியுதவி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஒரே நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக பல கப்பல்கள் கட்ட ஒப்பந்தம் கிடைத்தால், அதற்காக கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படும். கப்பல் கட்டுமான மேம்பாட்டு திட்டத்திற்காக 19,989 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், புதிய கப்பல் கட்டுமான மையங்கள் உருவாக்கப்படும்.
ஏற்கனவே உள்ள கப்பல் தளங்கள் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் செய்யப்படும். இதற்காக உலர் துறைமுகங்கள், கப்பல் துாக்கும் அமைப்புகள், உற்பத்தி வசதிகள், தானியங்கி முறைகள் போன்ற முக்கிய உட்கட்டமைப்புகளுக்கு அரசு மூலத ன ஆதரவு வழங்கும்.
கப்பல் கட்டுமான மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, கப்பல் கட்டுமானப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த, தேசிய கப்பல் கட்டுமான மிஷன் அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திறன் உயரும்!
இந்த வழிகாட்டுதல்கள் மூலம், உள்நாட்டு கப்பல் கட்டுமானம் உயிர்பெறும். கப்பல் துறையுடன் தொடர்புடைய இணைத் தொழில்கள் ஊக்கம் பெறும். உலக சந்தையில் இந்திய கப்பல் துறையின் போட்டித்திறன் மேலும் உயரும்.
- சர்பானந்த சோனோவால், மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர், பா.ஜ.,

