ADDED : ஏப் 17, 2025 09:41 PM
புதுடில்லி: மோசடி முறைகளைப் பயன்படுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களை 50 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாக ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை மைய நிர்வாகிகளாக காட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்த கும்பல் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
பணப்பரிமாற்றம் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஜாகிர், 32, கரண் சுவாமி, 20, ஜாவேத், 20, குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்த தேஜாஸ் பஞ்சால், 26, ஜோத்பூரைச் சேர்ந்த முகமது சோஹைல் என்ற சாஹில், 26, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த கும்பல், வங்கிகளின் பெயரில் வாடிக்கையாளர்களுக்கு போலி எஸ்.எம்.எஸ்., அனுப்பியும் மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்தது. அத்துடன் ஆன்லைன் வேலை வாய்ப்பு வழங்குவதாகவும் சிலரை இந்த கும்பல் மோசடி செய்துள்ளனர்.
இதுவரை 50 லட்சம் வரை மோசடி செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடந்து வருகிறது.