பெங்களூரில் வெள்ள சேதங்களை தடுக்க ரூ.5,000 கோடி ஒதுக்கீடு
பெங்களூரில் வெள்ள சேதங்களை தடுக்க ரூ.5,000 கோடி ஒதுக்கீடு
ADDED : டிச 14, 2024 04:09 AM

பெலகாவி: பெங்களூரில் வெள்ள சேதங்களை தடுக்கும் வகையில், மாநில அரசு 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக, மாநில வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.
பெங்களூரில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து, மாநில வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா, சட்டசபையில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
பெங்களூரில் கனமழை பெய்யும்போது அடிக்கடி பாதிப்புகளை சந்திக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. மழைநீர் சீராக செல்லும் வகையில் சாக்கடை கால்வாய்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 1,100 கி.மீ., துாரத்திற்கு மழைநீர் சீராக செல்லும் வகையில், நிரந்தர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 700 கி.மீ., துாரத்திற்கு சாக்கடை கால்வாய் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 300 கி.மீ., துார சாக்கடை கால்வாய், அடுத்த ஓராண்டில் மேம்படுத்தப்படும். இதற்காக பேரிடர் மீட்புக் குழு மூலம் 240 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
நகரில் மழை பெய்தால் வெள்ள சேதம் ஏற்படாமல்தடுக்கும் பணி களை மேற் கொள்ள 5,000 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. இதற்காக உலக வங்கியிடம் இருந்து 3,000 கோடி ரூபாய், மாநகராட்சியிடம் இருந்து 2,000 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட 110 கிராமங்களில் வடிகால் வசதி ஏற்படுத்தி, சாக்கடை நீர் நேரடியாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செல்ல வழிதடம் ஏற்படுத்தவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மழையால் அடிக்கடி சேதம் அடையும் முக்கிய சாலைகளை கண்டறிந்து, அந்த சாலைகளை சீரமைத்து தார் சாலை அமைக்க 695 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலை பெற்று, டெண்டர் பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

