'முடா'வில் ரூ.5,000 கோடி முறைகேடு ஆர்.டி.ஐ., ஆர்வலர் கங்கராஜு 'பகீர்'
'முடா'வில் ரூ.5,000 கோடி முறைகேடு ஆர்.டி.ஐ., ஆர்வலர் கங்கராஜு 'பகீர்'
ADDED : நவ 22, 2024 07:11 AM

மைசூரு; முடாவில் வீட்டுமனை ஒதுக்கியதில் 5,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்து இருப்பதாகவும், இதுகுறித்து அமலாக்கத் துறையிடம் புகார் செய்வேன் என்றும் ஆர்.டி.ஐ., ஆர்வலர் கங்கராஜு கூறி உள்ளார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
முடாவில் வீட்டுமனைகள் ஒதுக்கியதில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்து இருப்பதாக ஒவ்வொருவரும் ஒன்றொன்று கூறுகின்றனர். ஆனால் 5,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததற்கு, என்னிடம் ஆவணம் உள்ளது. ஆவணங்களுடன் அமலாக்கத்துறையில் புகார் செய்ய உள்ளேன்.
முதல்வர் சித்தராமையா 20 கோடி ரூபாய் முதல் 30 கோடி ரூபாய் வரை ஊழல் செய்து இருக்க வாய்ப்பு உள்ளது. முறைகேடு தொடர்பாக முடாவின் அனைத்து பிரிவு அதிகாரிகள், ஊழியர்கள் மீதும் விசாரணை நடத்த வேண்டும்.
அனைவரின் வங்கிக்கணக்கு புத்தகங்களை ஆய்வு செய்ய வேண்டும். சொத்துகள் குறித்து விசாரிக்க வேண்டும். வளர்ச்சி பணிகளுக்கு கையகப்படுத்தப்பட்ட பின்னர் கைவிடப்பட்ட நிலங்களை வைத்து கூட முறைகேடு செய்து உள்ளனர். லோக் ஆயுக்தா போலீசார் விசாரித்தால், முதல்வர் தப்பிவிட வாய்ப்பு உள்ளது. மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் விசாரித்தால் சரியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் நேற்று டில்லி சென்ற சித்தராமையா, முடா வழக்கில் தனக்காக நீதிமன்றத்தில் ஆஜராகும், உச்ச நீதிமன்ற மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வியை சந்தித்து வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். முடா வழக்கில் சித்தராமையாவிடம் விசாரிக்க, உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து அவர், இரு நீதிபதிகள் அமர்வில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வர உள்ள நிலையில், அபிஷேக் சிங் மனுவியை சந்தித்து ஆலோசித்தது குறிப்பிடத்தக்கது.