ரூ.5.5 கோடி விளையாட்டு பணிகள் இழுபறி! தீவிரம் காட்டாத கேரள அரசு : சித்துார் கல்லுாரியில் அவலம்
ரூ.5.5 கோடி விளையாட்டு பணிகள் இழுபறி! தீவிரம் காட்டாத கேரள அரசு : சித்துார் கல்லுாரியில் அவலம்
ADDED : ஜூன் 30, 2025 09:30 PM

பாலக்காடு; பாலக்காடு மாவட்டம், சித்தூர் அரசு கல்லூரியில், மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும், 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகள், 6 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், தமிழக எல்லை அருகே இருக்கும் சித்தூரில், அரசு கல்லூரி செயல்படுகிறது. இக்கல்லுாரி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
இக்கல்லூரி தமிழக மற்றும் கேரளா மாநில எல்லை பிரிப்புக்கு முன், சென்னை பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியாக, 1947ல் தொடங்கப்பட்டது. தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியில் அமைந்த இக்கல்லூரியில், சில தமிழ் ஆளுமைகளும் படித்துள்ளனர்.
இன்றும், தமிழ் மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வந்து, தங்கி படிக்கிறார்கள். அது மட்டுமின்றி விளையாட்டு துறையில் தனக்கென ஒரு இடத்தை கல்லூரி பிடித்துள்ளது.
இதனால், கல்லூரி மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த, கேரளா அரசு சர்வதேச தரம் வாய்ந்த கால்பந்து, கூடைப்பந்து மைதானம், நீச்சல் குளம் அமைக்க திட்டமிட்டது. இதற்காக, 5.5 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த திட்ட பணிகளை, 2019ல் அப்போதைய மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ஜெயராஜன் துவக்கி வைத்தார்.
திட்டத்தின் கட்டுமான பணிகள் ஒப்பந்த அடிப்படையில், கொச்சியை மையமாகக் கொண்டு செயல்படும் 'கிட்கோ' என்ற நிறுவனம் மேற்கொண்டது. பணிகள், 75 சதவீதம் நிறைவடைந்த நிலையில் பரிசோதனை நடந்தது. அதில், விதிமுறைகளை பின்பற்றாமல் பணிகள் நடந்துள்ளதை அரசு கண்டறிந்தது.
இதையடுத்து, அந்நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. பல்வேறு தொழில்நுட்ப பிரச்னைகளால் திட்ட பணிகளில் பின்னடைவு ஏற்பட்டது. இத்திட்டத்தில், கேரள அரசு தீவிரம் காட்டாமல் உள்ளது. இதனால், விளையாட்டு கட்டமைப்புகள் ஏற்படுத்துவது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:
கல்லுாரியில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்தும் திட்டம் நிறைவேறினால், நாட்டிற்கு திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும். இரண்டு ஆண்டுகளில் முடிய வேண்டிய திட்டப்பணிகள், தற்போது பயனற்று கிடக்கிறது.
கல்லூரி தரப்பில் இருந்து இதுபற்றி அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இருந்தாலும், பல தொழில்நுட்ப பிரச்னைகளால் திட்டப் பணிகள் இழுபறியாக உள்ளது.
தற்போது, இப்பணிகளை மேற்கொள்ள, 'ஸ்போர்ட்ஸ் கேரளா பவுண்டேஷன்' அமைப்புக்கு அரசு ஒப்பந்தம் அளித்துள்ளது.
இவ்வாறு, கூறினார்.