பயிர் இழப்புக்கு ரூ.6 நிவாரணம்: மஹாராஷ்டிர விவசாயி வேதனை
பயிர் இழப்புக்கு ரூ.6 நிவாரணம்: மஹாராஷ்டிர விவசாயி வேதனை
ADDED : நவ 06, 2025 06:20 AM

சத்ரபதி சாம்பாஜிநகர்: மஹாராஷ்டிராவில், பயிர் இழப்புக்கு விவசாயி ஒருவருக்கு, அம்மாநில அரசு 6 ரூபாயை நிவாரண தொகையாக வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹா.,வில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது இங்கு, கடந்தாண்டு ஆக., மற்றும் செப்., மாதங்களில் கனமழை கொட்டியது. இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 31,628 கோடி ரூபாய் இழப்பீடு தொகையை அரசு அறிவித்தது.
இந்நிலையில், அகோலா மாவட்டத்தில் 3 - 21 ரூபாய் வரை பயிர் இழப்பு தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மராத்வாடாவின் தாவர்வாடி கிராமத்தை சேர்ந்த திகம்பர் சுதாகர் டாங்டே என்ற விவசாயிக்கு 6 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அவர் கூறுகையில், 'கன மழையால் பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடாக, 6 ரூபாய் என் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதை வைத்து, ஒரு கப் டீ கூட வாங்க முடியாது. இவ்வளவு குறைவாக இழப்பீடு வழங்கியதற்கு அரசு வெட்கப்பட வேண்டும்' என்றார்.

